புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க அழிய வேண்டுமென்ற எண்ணத்தில் இருப்பதாக, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார்.
சென்னை, கொளத்தூரில் நடைபெற்ற நிகழ்வில் முதலமைச்சர் ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது அரசின் செயல்பாடுகள் குறித்து பல தகவல்களை அவர் கூறியுள்ளார். குறிப்பாக, இந்தியாவின் தொலைநோக்கு திட்டங்களை செய்யக்கூடிய அரசாக தமிழ்நாடு அரசு திகழ்வதாக கூறிய முதலமைச்சர் ஸ்டாலின், எவ்வளவு நெருக்கடியான வேலைகள் இருந்தாலும் கொளத்தூருக்கு வருவது தனக்கு மகிழ்ச்சி அளிப்பதாக கூறினார்.
மேலும், தி.மு.க எதையும் செய்யவில்லை என பலர் கூறுவதாக குறிப்பிட்ட அவர், கடந்த மூன்றரை ஆண்டுகளில் தி.மு.க செய்த திட்டங்கள் என்ன என்று எண்ணிப் பார்க்க வேண்டுமென்று தெரிவித்துள்ளார். மேலும், மீதமுள்ள திட்டங்களையும் வரவிருக்கும் காலங்களில் விரைவாக நிகழ்த்துவோம் என உறுதியளித்துள்ளார்.
தொடர்ந்து பேசிய ஸ்டாலின், மழை பெய்த போது சாலைகளில் தண்ணீர் தேங்கவில்லை எனக் கூறினார். ஆனால், சில ஊடகங்கள் கடந்த ஆண்டு புகைப்படங்களை பதிவிட்டு, தி.மு.க ஆட்சியில் ஒரு நாள் மழைக்கே சாலைகளில் தண்ணீர் தேங்குவதாக பரப்பியதாக குற்றஞ்சாட்டினார்.
இதனிடையே, தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை முதல் முறையாக முதலமைச்சர் ஸ்டாலின் மறைமுகமாக தாக்கி பேசியுள்ளார். அதன்படி, புதிதாக கட்சி தொடங்குபவர்கள் கூட தி.மு.க ஒழிய வேண்டும், அழிய வேண்டுமென்ற நோக்கத்தில் இருப்பதாக ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
அதன்படி, அவர்களுக்கெல்லாம் தி.மு.க பதிலளிக்க வேண்டிய அவசியம் இல்லை எனவும், அறிஞர் அண்ணா பாணியில் வாழ்க வசவாளர்கள் எனக் கூறி கொள்ள விரும்புகிறேன் எனவும் முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக, தமிழக வெற்றிக் கழகத்தின் முதல் மாநில மாநாட்டின் போது அக்கட்சி தலைவர் விஜய், திராவிட மாடல் அரசு என்ற பெயரில் மக்களுக்கு விரோதமாக தி.மு.க செயல்படுவதாக குற்றஞ்சாட்டியிருந்தார். மேலும், த.வெ.க-வின் செயற்குழு கூட்டத்தின் போதும், தி.மு.க-வை விமர்சித்து தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டிருந்தன.
இந்நிலையில், முதலமைச்சர் ஸ்டாலின் விஜய்யை விமர்சித்து மறைமுகமாக சாடியிருப்பது அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“