தற்போது தமிழ்நாட்டில் புதிதாக சில கட்சிகள் தொடங்கப்பட்ட நிலையில், அவர்கள் தங்களை அடுத்த முதலமைச்சர் எனக் கூறிக் கொண்டிருக்கிறார்கள் என தமிழக வெற்றிக் கழக தலைவர் விஜய்யை, முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்துள்ளார்.
சுமார் 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட நாம் தமிழர் கட்சியினர் உள்ளிட்ட பல்வேறு கட்சியினர், இன்றைய தினம் தங்களை தி.மு.க-வில் இணைத்துக் கொண்டனர். சென்னை, அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் முன்னிலையில் நடைபெற்ற இந்நிகழ்வில், துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
இந்நிகழ்வில் பேசிய முதலமைச்சர் ஸ்டாலின், "மாற்றுக் கட்சியை சேர்ந்த பலர் தி.மு.க-வில் இணைந்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது. தி.மு.க என்பது நேற்று முளைத்த காளான் அல்ல. 1949-ல் தி.மு.க-வை அண்ணா உருவாக்கினார். மக்கள் பணியாற்ற வேண்டும் என்பதற்காகவே தி.மு.க உருவாக்கப்பட்டது.
1957-ஆம் ஆண்டில் தான் முதல் தேர்தல் களத்தில் தி.மு.க இறங்கியது. இன்று கூட சில கட்சிகளை பார்க்கிறோம். கட்சி தொடங்கிய உடன் ஆட்சிக்கு வருகிறோம் எனக் கூறுகிறார்கள். அனாதை நிலையில் சுற்றிக் கொண்டிருப்பவர்கள் எல்லாம் கூட, தாங்கள் தான் அடுத்த முதலமைச்சர் என பிதற்றிக் கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் யார், எந்தக் கட்சியைச் சேர்ந்தவர்கள் என்று சொல்வதற்கு நான் விரும்பவில்லை. அவர்களை அடையாளம் காட்டுவதற்கு நான் தயாராக இல்லை. அவர்களின் பெயரைக் கூறி, இந்த மேடையின் அங்கீகாரத்தை குறைக்க நான் விரும்பவில்லை. நான், உதயநிதி, துரைமுருகன் என எல்லோரும் மாற்றுக் கட்சியினர் என்று தான் கூறினோம். அக்கட்சியின் பெயரைக் கூறுவதற்கு கூட எங்களுக்கு வாய் வரவில்லை.
எத்தனையோ கட்சியின் பெயரைக் கூறுகிறோம். ஆனால், இந்தக் கட்சியின் பெயரை கூற நாங்கள் மறுக்கிறோம். உண்மையிலேயே மக்களுக்கு பாடுபடக் கூடிய அரசியல் கட்சியாக இருந்தால் அவர்கள் பெயரைக் கூறலாம். ஆனால், வேஷமிட்டு நாடகம் நடத்திக் கொண்டிருப்பவர்களை எல்லாம் அடையாளம் காண்பிக்க நான் விரும்பவில்லை" எனக் கூறினார்.