/indian-express-tamil/media/media_files/Zs0NS6ULXlvVwz1xPNi7.jpg)
சென்னை மண்டல தி.மு.க வாக்குச் சாவடி பொறுப்பாளர்களுக்கான பயிற்சி பாசறை கூட்டம் திருவள்ளூரில் நேற்று(நவ.5) நடந்தது. இதில், சென்னை தெற்கு மற்றும் கிழக்கு, திருவள்ளூர் கிழக்கு, மேற்கு, காஞ்சிபுரம் வடக்கு, தெற்கு உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்ந்த 12,000 வாக்குச் சாவடி முகவர்கள் பங்கேற்றனர்.
தி.மு.க தலைவர், முதல்வர் ஸ்டாலின் வைரஸ் காய்ச்சலால் பாதிக்கப்பட்டுள்ளதால், காணொலி வாயிலாக கலந்து கொண்டார். ஸ்டாலின் கூறியபடி, அவரின் உரையை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கூட்டத்தில் வாசித்தார்.
அதில், "ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கு உட்பட்ட பகுதிகளில் இருக்கும் வாக்காளர்களுக்கும், மக்களவை தேர்தல் வெற்றிக்கும் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள்தான் முழு பொறுப்பு. உங்களை நம்பித்தான் ‘நாற்பதும் நமதே, நாடும் நமதே’ என்று கம்பீரமாக முழங்குகிறோம். அதே கம்பீரத்தோடு இன்று முதல் வாக்குச்சாவடி பொறுப்பாளர்கள் பணியாற்ற வேண்டும்.
தமிழகத்தில் உள்ள ஒவ்வொரு குடும்பமும் பயனடையும் வகையில் பார்த்துப் பார்த்து திட்டங்களை செயல்படுத்தி வருகிறோம். இதனால், திமுக ஆட்சி மீது மக்கள் மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். 'இந்தியா' கூட்டணி வெற்றிக்காக, திமுக அரசின் சாதனைகளை மட்டுமின்றி, பாஜகவின் உண்மை முகத்தையும் வெளிப்படுத்த வேண்டும். பா.ஜ.கவின் மக்கள் விரோத நடவடிக்கைகளை மக்களிடம் சொல்லுங்கள்.
அரசியல் பழிவாங்கலுக்கான பா.ஜ.கவின் கூட்டணி கட்சிகள் தான் வருமான வரித் துறையும், அமலாக்கத் துறையும். ‘ரெய்டு’கள் மூலமாக அ.தி.மு.கவை மிரட்டி நீட்டிய இடங்களில் எல்லாம் கையெழுத்து வாங்கியது போல் நம்மையும் மிரட்டலாம் என்று மத்திய பா.ஜ.க அரசு பகல் கனவு காண்கிறது. இந்த சலசலப்புகளுக்கும், அச்சுறுத்தல்களுக்கும் மிரட்டல்களுக்கும் பயப்படும் இயக்கம் அல்ல தி.மு.க. 75 ஆண்டுகாலமாக இதை எல்லாம் எதிர்த்து நின்றுதான் வெற்றி பெற்றுள்ளோம். வெற்றி என்றைக்கும் தொடரும்" என்று கூறினார்.
இந்த கூட்டத்தில் அமைச்சர்கள் கே.என்.நேரு, ஆர்.காந்தி, மா.சுப்பிரமணியன், சேகர் பாபு, எம்.பி.க்கள் டி.ஆர்.பாலு, ஜெகத்ரட்சகன், தயாநிதி மாறன், கலாநிதி வீராசாமி, எம்.எல்.ஏ-க்கள் வி.ஜி.ராஜேந்திரன், எஸ்.சந்திரன், சா.மு.நாசர், ஆ.கிருஷ்ணசாமி, சுதர்சனம் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.