அடுத்த ஆண்டு நாடாளுமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. பா.ஜ.க-வை வீழ்த்த எதிர்க்கட்சிகள் 'இந்தியா' கூட்டணியில் ஒன்றிணைந்துள்ளன. காங்கிரஸ், தி.மு.க, திரிணாமுல் காங்கிரஸ், ஆம் ஆத்மி உள்ளிட்ட 28 கட்சிகள் இந்தியா கூட்டணியில் இணைந்துள்ளன. பா.ஜ.க-வை வீழ்த்துவதற்கான யூகங்களை வகுத்து வருகின்றன.
அந்த வகையில் தமிழ்நாட்டில் நாடாளுமன்ற தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கும் வகையிலும், இந்தியா கூட்டணிக்கு வலு சேர்க்கும் வகையிலும் முதல்வர் ஸ்டாலின் 'Speaking for India' என்ற தலைப்பில் ஆடியோ சீரிஸில் பேச உள்ளார். இந்த ஆடியோ சீரிஸின் முதல் ஆடியோ இன்று (செப்.4) வெளியானது. தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், ஹிந்தி ஆகிய 5 மொழிகளில் ஆடியோ ரிலீஸ் வெளியாகி உள்ளது.
http://speaking4india.com என்ற இணையத்தில் இந்த ஆடியோ பதிவு வெளியிடப்பட்டுள்ளது.
அடிப்படை கட்டமைப்பை சிதைக்கும் பா.ஜ.க
அந்த ஆடியோவில், 'தமிழ்நாட்டின் முதலமைச்சராக, இந்திய நாடாளுமன்றத்தின் பெரிய கட்சியான திமுகவின் தலைவராக இருக்கின்ற இந்த முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின் உங்களில் ஒருவனாக இந்தியாவுக்காக பேசப்போவது தான் இந்த பாட்காஸ்ட் சீரியஸோட நோக்கம். இந்தியாவுக்காக எல்லோரும் பேச வேண்டிய கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். காலம் காலமா இந்திய மக்கள் அனைவரும் போற்றிப் பாதுகாத்து வந்த ஒற்றுமை உணர்வு என்ற தத்துவத்தை சிதைத்து இந்தியாவின் அடிப்படை கட்டமைப்பையே சிதைக்க பாஜக முயற்சி பண்ணுது.
2014 ஆம் ஆண்டு ஆட்சி அதிகாரத்துக்கு வந்த பாஜக, தேர்தலுக்கு முன்னால் கொடுத்த எந்த மக்கள் நல வாக்குறுதியையும் நிறைவேற்ற வில்லை. வெளிநாட்டில் இருந்து கருப்பு பணத்தை மீட்டு வந்து ஆளுக்கு 15 லட்சம் தருவோம்; ஆண்டுதோறும் இரண்டு கோடி பேருக்கு வேலைவாய்ப்பு; உழவர்களின் வருமானத்தை இரண்டு மடங்கு ஆக்குவோம்; சொந்த வீடு இல்லாதவர்களே இருக்க மாட்டாங்க; இந்தியா ஐந்து ட்ரில்லியன் டாலர் பொருளாதார நாடாக மாறும் என இப்படியெல்லாம் வாயால வடை சுட்டாங்க.
இப்பொழுது இல்லையென்றால்..
10 ஆண்டு ஆகப் போகுது. ஆனா எந்த வாக்குறுதியும் நிறைவேற்றவில்லை. குஜராத் மாடல் என பொய் சொல்லி ஆட்சிக்கு வந்த நரேந்திர மோடி மாடல், என்ன மாடல் என்று தெரியாமல் முடியப் போகிறது. திராவிட மாடல் என்னென்ன சாதனைகளை தமிழ்நாட்டில் செய்திருக்கிறது என்று நாம் புள்ளி விவரத்தோடு அடுக்கிய பிறகு அவர்கள் பெருமையா பேசி வந்த குஜராத் மாடல் பற்றி இப்போ மறந்தும் கூட பேசுவதில்லை. இது ஒரு பக்கம் என்றால் இன்னொரு பக்கம் நல்லா இருந்த இந்தியாவின் பொதுத்துறை கட்டமைப்பையும் சீரழிச்சு சின்னா பின்னம் ஆக்கிட்டாங்க. தங்களுக்கு நெருக்கமான தொழிலதிபர்களுக்கு மடைமாற்றும் செயலை மட்டுமே செய்து கொண்டிருக்கிறார்கள்.
ஒட்டுமொத்த இந்திய மக்கள் நலன் என்பது சில பேருடைய நலனா சுருங்கிவிட்டது. அரசுக்கு சொந்தமான ஏர் இந்தியா நிறுவனம் இப்பொழுது தனியாருக்கு விற்கப்பட்டு விட்டது. இந்தியா முழுக்க இருக்கும் விமான நிலையங்கள், துறைமுகங்கள் தனியார் கைக்குப் போகிறது.
பிரதமர் மோடி சொன்னது போல உழவர்களுடைய வருமானமும் இரண்டு மடங்கு ஆகவில்லை. ஏழை பாழைகளின் வாழ்க்கை தரம் உயரவில்லை. இதையெல்லாம் மறைப்பதற்கு தான் மதவாதத்தை கையெடுத்திருக்கிறார்கள்.
மக்களுடைய மத உணர்வுகளைத் தூண்டி அதில் குளிர்காயப் பார்க்கிறார்கள். 2002 ஆம் ஆண்டு குஜராத் மாநிலத்தில் பாஜக விதைத்த வன்முறை வெறுப்பு விதையானது 2023-ம் ஆண்டு வடகிழக்கு மாநிலமான மணிப்பூரை பற்றி எரிய வைத்திருக்கிறது. ஹரியானாவில் மூட்டி விடப்பட்ட மதவெறி இன்று அப்பாவி மக்களின் உயிரையும் சொத்துக்களையும் காவு வாங்குது. இதற்கு இப்பொழுது முற்றுப்புள்ளி வைக்கவில்லை என்றால் இந்தியாவை யாராலும் காப்பாற்ற முடியாது என்று கூறினார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.