வெறுப்பு அரசியலை விட அன்பை விதைக்கும் அரசியல் தான் வலுவானது என்று முதலமைச்சர் ஸ்டாலின் குறிப்பிட்டுள்ளார்.
சென்னை, சைதாப்பேட்டை எம்.சி. ராஜா கல்லூரி மாணவர்கள் விடுதி வளாகத்தில் புதிய விடுதி கட்டட திறப்பு விழா இன்று (ஏப்ரல் 14) நடைபெற்றது. இதில் முதலமைச்சர் ஸ்டாலின், விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினருமான திருமாவளவன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதைத் தொடர்ந்து, சென்னை கலைவாணர் அரங்கத்தில் நடைபெற்ற சமத்துவ நாள் விழாவில் முதலமைச்சர் ஸ்டாலின் உரையாற்றினார். அப்போது சமத்துவ நாளின் முக்கியத்துவம் உள்ளிட்ட பல்வேறு தகவல்களை அவர் பகிர்ந்து கொண்டார்.
அதன்படி, "இன்று வரலாற்று சிறப்பு மிக்க நாள். தீண்டாமைக்கு எதிராக போராடிய அம்பேத்கரின் பிறந்தநாள். இதற்காக தான், தந்தை பெரியாரின் பிறந்தநாளை சமூகநீதி நாளாகவும், புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்தநாளை சமத்துவ நாளாகவும் திராவிட மாடல் அரசு அறிவித்தது.
இன்று காலை அம்பேத்கர் மணிமண்டபத்தில் சமத்துவ நாள் உறுதிமொழி எடுக்கப்பட்டது. சமத்துவத்தை நோக்கி நமது சமூகம் வேகமாக நகர வேண்டும். ஒவ்வொருவரின் உள்ளத்திலும் மாற்றத்திற்கான சிந்தனை வர வேண்டும். அம்பேத்கரை கொண்டாடும் இயக்கம் தான் திராவிட இயக்கம்.
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் தான் அம்பேத்கர் சட்டக் கல்லூரி என்று பெயர் சூட்டப்பட்டது. அதனை கருணாநிதி செய்தார். இன்றைய சூழலில் கொள்கை பிடிப்பு மிக்க அரசியல் தலைவராக திருமாவளவன் உயர்ந்து இருக்கிறார்.
திராவிட மாடல் ஆட்சியில் எண்ணிலடங்காத சாதனைகளை செய்கிறோம். இதனால் தான் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் மாணவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. சமூகநீதியை நிலைநாட்டும் அரசாக திராவிட மாடல் ஆட்சி விளங்குகிறது.
நம்மிடையே ஏற்பட்டிருக்கும் முற்போக்கு, சமத்துவ சிந்தனைகள் அனைத்தும் எல்லோரிடமும் உருவாக வேண்டும். அதற்காக நாம் ஓயாமல் உழைக்க வேண்டும். வெறுப்பு அரசியலை விட, அன்பை விதைக்கக் கூடிய அரசியல் தான் வலுவானது, ஆற்றல் வாய்ந்தது என நான் உளமாற நம்புகிறேன்.
தமிழ், தமிழர் என்ற உணர்வு தான் நம்மை ஒன்றிணைக்கும். நம்முடைய பாதையில் பிரச்சனைகள் ஏற்படுத்தப்படும். அதை எல்லாம் உணர்ந்து தான், நம்முடைய உழைப்பை கொடுக்க வேண்டும். இதைத் தான் பெரியார் மற்றும் அம்பேத்கர் முதலானோர் செய்தனர்.
எதிரிகளையும், அவர்களின் பரப்புரைகளையும் அடையாளம் கண்டு கொள்ள வேண்டும். அவ்வாறு செய்தால் நமக்கான தடைகளை உடைப்பது எளிதாகி விடும்" என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.