/indian-express-tamil/media/media_files/2025/06/01/eBxC4F57TvUs4QYL2ruJ.jpg)
ஜூன் மாதத்தின் முதல் வாரத்தில் இருந்து தி.மு.க நிர்வாகிகளை தொகுதி வாரியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்த இருப்பதாக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
இன்றைய தினம் (ஜூன் 1) மதுரையில் தி.மு.க-வின் பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. இந்தக் கூட்டத்தில் 27 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. இதைத் தொடர்ந்து, கட்சி தொண்டர்கள் முன்னிலையில் ஸ்டாலின் உரையாற்றினார்.
அப்போது, "தி.மு.க ஒரு வழக்கமான அரசியல் கட்சி கிடையாது. ஆனால், கொள்கைக்காக தோன்றி மக்களின் ஆதரவை பெற்ற அரசியல் இயக்கம் தி.மு.க. இந்தியாவிலேயே முதன்முறையாக ஒரு மாநில கட்சி ஆட்சியை பிடித்த வரலாறு தி.மு.க-விற்கு உள்ளது.
இனத்திற்காக உரிமை குரல் எழுப்பும் கட்சி தி.மு.க தான். நாம் தடம் மாறாத கொள்கை கூட்டம். அதனால் தான் எந்த கோமாளிக் கூட்டத்தாலும் நம்மை வெல்ல முடியவில்லை; இனியும் நம்மை வெல்ல முடியாது. இங்கு கூடி இருக்கும் அனைவருக்கும் ஒன்றை நான் சொல்லிக் கொள்ள விரும்புகிறேன்.
7-வது முறையாக தி.மு.க வாகை சூட வியூகம் அமைக்கும் பொதுக்கூழு கூட்டம் இன்று நடைபெற்றது. அடுத்த ஆண்டு இதே நேரத்தில், 7-வது முறையாக தி.மு.க ஆட்சி அமைத்தது என்று தலைப்பு செய்தி வந்திருக்க வேண்டும். ஸ்டாலின் தலைமையில் இரண்டாவது முறையாக திராவிட மாடல் ஆட்சி தொடர்கிறது என்பது தான் தலைப்பு செய்தியாக இருக்க வேண்டும்.
அதற்காக வியூகத்தை வகுக்கவே இந்தப் பொதுக்குழு கூட்டம் நடத்தப்பட்டது. நான் மமதையில் பேசுபவன் இல்லை. கண்ணுக்கு எட்டிய தூரம் வரை எதிரிகளே இல்லை என்று ஆணவத்தில் சொல்பவன் இல்லை. எந்தக் காலத்திலும் எனக்கு ஆணவமோ, மமதையோ வராது. பணிவு தான் தலைமைப் பண்பின் அடையாளம்.
வரலாறு காணாத வெற்றியை தி.மு.க பதிவு செய்யும் என்று கூறுவது மக்கள் மீது இருக்கும் நம்பிக்கையில் தான். உலகத்தில் எந்தக் கட்சிக்கும் இப்படிப்பட்ட தொண்டர்கள் கிடைத்திருக்க மாட்டார்கள். சூரியன் நிரந்தரமானது; அதேபோல், தி.மு.க-வும் நிரந்தரமானது.
அவதூறுகள், பொய்கள் மூலமாக நம்மை வீழ்த்த பார்க்கிறார்கள். தமிழ்நாட்டை பொருளாதார ரீதியாக ஒடுக்க நினைத்தாலும், அவை அனைத்தையும் எதிர்த்து நிற்கிறோம். இவை அனைத்தையும் கடந்து இந்தியாவிலேயே வளர்ச்சியில் நம்பர் - 1 மாநிலமாக தமிழ்நாட்டை உயர்த்தி இருக்கிறோம்.
இந்த சூழலில், ஜூன் முதல் வாரத்தில் இருந்து அண்ணா அறிவாலயத்தில் கட்சி நிர்வாகிகளை தொகுதி வாரியாக சந்திக்க உள்ளேன். இன்னும் விரிவாக one to one பேசுவோம்" என்று முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.