ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன் என்று தி.மு.க. மாவட்டச் செயலர்கள், தொகுதி பார்வையாளர்கள், சார்பு அணிச் செயலாளர்கள் கூட்டத்தில் அக்கட்சியின் தலைவரும் முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
முதல்வர் மு.க.ஸ்டாலின் காணொலி காட்சி வாயிலாக இன்று ஆற்றிய உரையில், ஓரணியில் தமிழ்நாடு - திமுகவுக்கான உறுப்பினர் சேர்க்கைக்காக மட்டுமல்ல; இது தமிழ்நாட்டின் மண், மொழி, மானம் காக்க எல்லோரையும் ஓரணியில் திரட்டுவதற்கான முயற்சி. ஓரணியில் தமிழ்நாடு’ இயக்கத்தில் இணைந்தவர்களில் விருப்பம் உள்ளவர்கள் திமுகவில் உறுப்பினர்களாகவும் இணைவார்கள். சாதி, மதம், கட்சி சார்பு என எதையும் பார்க்காமல் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்தையும் நாம் சென்றடைய வேண்டும். தமிழ்நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதிகளுக்கு எதிராக மக்களை ஒன்றிணைக்க வேண்டும்.
கீழடி உண்மைகள் புதைக்கப்படுகிறது; இந்தியைத் திணிக்கிறார்கள்; கல்வி நிதி மறுக்கப்படுகிறது; நீட் மூலம் மாணவர்கள் பலி வாங்கப்படுகிறார்கள்; தொகுதி மறுவரையறை மூலமாக நாடாளுமன்றத்தில் நம் வலிமையைக் குறைக்க சதி நடக்கிறது. பண்பாடு, பொருளாதாரம், அரசியல் என எல்லா வகையிலும் நம் மீது வன்மத்துடன் செயல்படுகிறார்கள். ஊதினால் அணைய நாம் என்ன தீக்குச்சியா? உதயசூரியன்!. நம்மை அடக்க நினைத்தால், நம் மண், மொழி, மானத்தைக் காப்பாற்ற ஒன்றாக நின்று எதிர்ப்போம்! இதுதான் தமிழர்களின் தனிக்குணம்; ஓரணியில் தமிழ்நாடு இயக்கத்தின் நோக்கமும் இதுதான்.
இந்தச் செய்தியைத் தமிழ்நாட்டின் ஒவ்வொரு குடும்பத்திடமும் சேர்ப்போம்; அதற்காக ஜுலை 1 தொடங்கி, 45 நாட்கள் ஓரணியில் தமிழ்நாடு முன்னெடுப்பு நடைபெறும். களத்தில் செயல்படும் நாம் 4 படிநிலைகளில் செயல்பட வேண்டும். இவ்வாறு ஸ்டாலின் குறிப்பிட்டார்.