இந்தியா என்பது எல்லைகளால் அல்ல எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும் என்றும் ஏற்ற தாழ்வற்ற அரசு தமிழ்நாட்டில் நடத்தி வருவதாக ஸ்டாலின் பேசியுள்ளார்.
சுதந்திர தினத்தையொட்டி, கோட்டை கொத்தளத்தில் முதல்வர் ஸ்டாலின் காலை 9 மணிக்கு தேசியக் கொடியை ஏற்றினார் இதைத் தொடர்ந்து அவர் பேசியதாவது : “ ஒரு கோடி மகளிருக்கு கலைஞர் மகளிர் உரிமைத் தொகை வழங்கப்பட உள்ளது. உழைக்கும் பெண்களுக்கான அங்கீகாரமாக கலைஞர் மகளீர் உரிமைத் தொகை வழங்கப்படுகிறது. குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வங்கிக்கணக்கில் வரவு வைக்கப்பட உள்ளது. இலவச பேருந்து பயணத்தின் மூலம் பெண்களால் மாதம் ரூ. 850 சேமிக்க முடிகிறது.
இந்தியா என்பது எல்லைகளால் அல்ல எண்ணங்களால் வடிவமைக்கப்பட வேண்டும். அனைவரும் விரும்புவது சமத்துவ, சகோதரத்துவ, சமதர்ம இந்தியாவை. சமூக நீதி, சமத்துவத்தின் அடிப்படையில் தமிழ்நாடு அரசு செயல்பட்டு வருகிறது. ஏற்ற தாழ்வற்ற அரசை தமிழ்நாட்டில் நடத்தி வருகிறோம்.
சுமார் 2 லட்சம் உயர் கல்வி பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ரூ. 350 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மாநில பட்டியலில் கல்வி இணைக்கப்பட வேண்டும். நான் முதல்வன் திட்டத்தின் கீழ் 13 லட்சத்திற்கும் மேற்பட்ட மாணவர்களுக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது. கல்வியை மாநில பட்டியலுக்கு மாற்றினால் நீட் போன்ற கொடூரத் தேர்வை அகற்ற முடியும்” என்று அவர் பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil