அயலகத் தமிழர் நாள் விழா; ‘தமிழால் இணைவோம்’ என முதல்வர் ஸ்டாலின் முழக்கம்

நிலங்கள் நம்மை பிரித்தாலும் மொழி நம்மை இணைக்கிறது; அயலகத் தமிழர் நாள் விழாவில் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு

CM stalin Tamil non-resident day speech highlights: அயலகத் தமிழர் நாள் விழாவில், உலகெங்கும் வாழும் வெளிநாடு வாழ் தமிழர்களை காணொலி வாயிலாகச் சந்தித்துப் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், தமிழ்ப் பண்பாட்டையும் மொழியையும் தற்போதைய தலைமுறை வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு அறிமுகப்படுத்த அனைத்து முயற்சிகளையும் மேற்கொள்வதாக உறுதியளித்துள்ளார்.

‘தமிழால் இணைவோம்’ என்ற அடிப்படையில் நாம் ஒன்று சேர்ந்துள்ளோம். தமிழுக்குத்தான் அந்த வலிமை உள்ளது. மத மாயங்கள், சாதிச் சழக்குகளை வீழ்த்தும் வலிமை மொழிக்குத்தான் உள்ளது. அதனால்தான், ‘தமிழால் இணைவோம்’ என்பதை நமது முழக்கமாக கொண்டுள்ளோம்.

உலகின் பல நாடுகளில் இருந்து தமிழன் என்ற உணர்வுடன் ஒன்றாக கூடியுள்ளோம். நிலங்கள் நம்மை பிரித்தாலும் மொழி நம்மை இணைக்கிறது. திமுக ஆட்சி அமையும் போதெல்லாம், இங்குள்ள தமிழர்களின் ஆட்சியாக மட்டுமின்றி, உலகம் முழுவதும் பரந்து வாழும் அனைத்து மக்களின் அரசாக செயல்பட்டு வருகிறது. உங்களில் பலருக்கும் தமிழகத்தில் வாக்களிக்கும் உரிமை இல்லாமல் இருக்கலாம். ஆனால், தமிழக அரசை நமது அரசு என்று சொல்லிக்கொள்ளும் உரிமை உங்களுக்கு எப்போதும் உண்டு.

நம்முடைய இனம் ஒரு நிலத்தில் – ஒரு நாட்டில் மட்டுமே வாழ்ந்த இனம் அல்ல. உலகளாவிய இனம் ஒன்று உண்டென்றால் அது தமிழினம் தான். உலகில் 30-க்கும் மேற்பட்ட நாடுகளில் அதிக எண்ணிக்கையிலும், 60-க்கும் மேற்பட்ட நாடுகளில் குறைந்த எண்ணிக்கையிலும் தமிழர்கள் வாழ்கின்றனர். தமிழர்கள் வணிகம் செய்வதற்காகச் சென்றார்கள். வாழ்வதற்காகச் சென்றார்கள்.
வேலைகளைத் தேடிச் சென்றார்கள். கடற்கோள்களில் இருந்து தப்புவதற்காகச் சென்றார்கள். புதிய இடங்களை அறிவதற்காகச் சென்றார்கள். இப்படிப் பலருக்கும் பல நோக்கங்கள் இருந்திருக்கும். இத்தகைய இடப்பெயர்வுகள் காலம்காலமாக நடந்து வருகின்றன. எங்கே தமிழர்கள் வாழ்ந்தாலும், அவர்களுக்கு தமிழ்நாடுதான் தாய் வீடு. இன்றைக்கு நவீனத் தொழில்நுட்பம் வளர்ந்துவிட்டது. உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து நான் பேசுவதைக் கேட்கிறீர்கள். நீங்கள் பேசுவதை பார்த்தபடி நானும் கேட்கிறேன்.

கடந்த 2011-ம் ஆண்டில் புலம்பெயர் தமிழர்களின் தேவைகளை பூர்த்தி செய்ய வெளிநாடு வாழ் தமிழர் நலச்சட்டம் இயற்றப்பட்டது. வெளிநாடு வாழ் தமிழர் நலவாரியம் உருவாக்கி, நலத் திட்டங்களை செயல்படுத்துவோம் என்று அறிவிக்கப்பட்டது. ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால் நலவாரியம் அமைக்கப்படவில்லை. மீண்டும் ஆட்சிக்கு வந்ததும் ‘வெளிநாடு வாழ் தமிழர் நல வாரியம்’ அமைக்கப்படும் என ஐந்தே மாதத்தில் சட்டப்பேரவையில் அறிவித்தேன்.

வெளிநாடு வாழ் தமிழர்கள் பணியின்போது இறக்க நேரிட்டால் அவர்கள் குடும்பத்தில் கல்வி பயிலும் குழந்தைகளுக்கு கல்வி உதவித்தொகை, திருமண உதவித்தொகை வழங்கப்படும். தமிழர்கள் புலம் பெயரும்போது பயண புத்தாக்கப் பயிற்சி பல்வேறு ஊர்களில் நடத்தப்படும். ஆலோசனை பெற கட்டணமில்லா தொலைபேசி வசதி, வலைதளம், கைபேசி செயலி அமைப்பதுடன், சட்ட உதவி மையம் அமைக்கப்படும்.

தமிழகம் திரும்பியவர்கள் குறுதொழில் செய்ய ஏதுவாக அதிகபட்சமாக ரூ.2.5 லட்சம் மானியத்துடன் கூடிய கடன் வசதி வழங்கப்படும். இதற்காக ரூ.6 கோடி ஒதுக்கப்படும் என்பது உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டதுடன், அனைத்துக்கும் சேர்த்து ரூ.20 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த வரிசையில், வெளிநாடுகளில் உள்ள தமிழ்ச் சங்கங்களுடன் இணைந்து ஆண்டுதோறும் ஜனவரி 12-ம் தேதி ‘உலகத்தமிழர் புலம்பெயர்ந்தோர் நாளாக’ கொண்டாடப்படும்.

தமிழகத்தில் உள்ள பிளவுகளுக்கு வெளிநாடு சென்ற பின்னரும் முக்கியத்துவம் தராதீர்கள். ஒருதாய் மக்களாக வாழுங்கள். கல்வியிலும் வேலைவாய்ப்பிலும், தொழில் வளர்ச்சியிலும் முன்னேற்றம் காணுங்கள். தமிழை, தமிழகத்தை விட்டு விடாதீர்கள். தமிழகத்துக்கு வாருங்கள். உங்கள் பிள்ளைகளுக்கு தமிழகத்தைக் காட்டுங்கள். அவர்களை அழைத்துவந்து கீழடியை, ஆதிச்சநல்லூரை காட்டுங்கள். இங்குள்ளதைபோல், அயலகத் தமிழ் மக்களுக்கும் எல்லாமுமாக இந்த அரசு இருக்கும்.

தமிழால் இணைவோம், தமிழை வளர்ப்போம், தமிழரை வளர்ப்போம். இவ்வாறு முதலமைச்சர் ஸ்டாலின் பேசினார்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Cm stalin tamil non resident day speech highlights

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com