சிவகங்கையில், போலீஸார் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட இளைஞர் கொடூரமான முறையில் மரணம் அடைந்துள்ள நிலையில், சம்பந்தப்பட்ட இளைஞரின் குடும்பத்தினருடன் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசியில் உரையாடினார்.
முன்னதாக, சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை அடுத்த மடப்புரம் பத்திரகாளியம்மன் கோயிலில், அஜித் குமார் என்ற இளைஞர் காவலாளியாக பணியாற்றி வந்தார். நகை திருட்டு வழக்கு தொடர்பாக அஜித் குமாரை விசாரணை செய்வதற்காக போலீசார் அழைத்துச் சென்ற நிலையில், அந்த இளைஞர் மரணமடைந்தார்.
இந்தச் சம்பவம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக 6 போலீஸார் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். மேலும், இதில் தொடர்புடையதாகக் கூறி குற்றம்சாட்டப்பட்டு கைது செய்யப்பட்ட போலீஸாரை, 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி வெங்கடேஷ் உத்தரவிட்டுள்ளார்.
இந்நிலையில், போலீஸார் விசாரணையில் மரணமடைந்த அஜித் குமாரின் குடும்பத்தினரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் செல்போனில் உரையாடினார். இது குறித்து அஜித் குமாரின் சகோதரர் கூறும் போது, "தொலைபேசி மூலமாக முதலமைச்சர் ஸ்டாலின் எங்களுடன் பேசினார். விசாரணைக்கு அழைத்துச் சென்ற இடத்தில் இத்தகைய சம்பவம் நடந்ததாக முதலமைச்சரிடம் கூறினேன். இது போன்ற ஒரு சம்பவம் இனி யாருக்கும் நடக்கக் கூடாது என்று கோரிக்கை விடுத்தேன்.
தனது ஆழ்ந்த இரங்கலை முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துக் கொண்டார். மேலும், எங்கள் குடும்பத்தினருக்கு என்ன வேண்டும் என்று முதலமைச்சர் கேட்டார். நிரந்தர வேலை வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தோம். அதற்கான நடவடிக்கையை மேற்கொள்வதாக முதலமைச்சர் ஸ்டாலின் உறுதியளித்துள்ளார். இது தவிர குடும்பத்தினருக்கு தேவையான அனைத்து உதவிகளையும் செய்து தருவதாக அவர் கூறினார்" எனத் தெரிவித்தார்.
மேலும் அஜித் குமாரின் தாயார் பேசுகையில், "தண்ணீர் கூட கொடுக்காமல் என் மகனை துன்புறுத்தியுள்ளனர். இதற்கு உரிய நீதி கிடைக்க வேண்டும் என்று முதலமைச்சரிடம் கோரிக்கை விடுத்தேன். முதலமைச்சர் ஸ்டாலின், தனது வருத்தத்தை தெரிவித்துக் கொண்டார். முதலமைச்சர் எங்களிடம் பேசியது மனதுக்கு ஆறுதலாக உள்ளது" என்று கூறினார்.
இந்த சூழ்நிலையில், பாதிக்கப்பட்ட குடும்பத்தினரிடம் முதலமைச்சர் ஸ்டாலின் தொலைபேசி மூலமாக உரையாடும் வீடியோ, அவரது எக்ஸ் தளப்பக்கத்தில் பதிவிடப்பட்டுள்ளது.