ஈரோடு கிழக்கு தொகுதியின் சட்டப்பேரவை உறுப்பினராக இருந்த ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் உடல் நலக்குறைவால் உயிரிழந்ததையடுத்து பிப்ரவரி 5ஆம் தேதி ஈரோடு கிழக்கு தொகுதிக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. இதில் திமுக, நாதக என இருமுனை போட்டி நிலவியது.
இந்த நிலையில், பிப்ரவரி 8 ஆம் தேதி ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதிக்கு வாக்கு எண்ணிக்கை நடைபெற்றது. இதில் திமுக கூட்டணி சார்பில் போட்டியிட்ட வேட்பாளர் வி.சி. சந்திரகுமார், ஒரு லட்சத்து 15 ஆயிரத்துக்கும் 512 வாக்குகளைப் பெற்று, 91 ஆயிரத்து 374 வாக்குகள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றியைப் பெற்றுள்ளார்.
இந்நிலையில், தேர்தலில் மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்களுக்கு, முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நன்றியை தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் எக்ஸ் தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில், “ஈரோடு கிழக்கு சட்டமன்ற இடைத்தேர்தலில் தி.மு.கழகக் கூட்டணி வேட்பாளர் சந்திரகுமார் அவர்களுக்கு மகத்தான வெற்றியை வழங்கிய ஈரோடு கிழக்கு வாக்காளப் பெருமக்கள் அனைவருக்கும் நெஞ்சார்ந்த நன்றி.
திராவிட முன்னேற்றக் கழகத்துக்கும், அதன் கூட்டணிக் கட்சிகளுக்கும், மக்கள் ஆதரவுடன் 2021-ஆம் ஆண்டு அமைந்த இந்த ஆட்சிக்கும் மக்கள் அளித்துள்ள மாபெரும் அங்கீகாரமே இந்த வெற்றி.
தேர்தலுக்கு முன்னதாகவே வெற்றி யாருக்கு என்பதை உணர்ந்து விட்ட எதிர்க்கட்சிகள், களத்துக்கே வராமல் புறமுதுகிட்டு ஓடிய காட்சியையும் முன்கூட்டியே தமிழ்நாடு பார்த்து விட்டது.
2019 முதல் நடைபெற்ற இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், சட்டமன்றப் பொதுத் தேர்தல், உள்ளாட்சி அமைப்புத் தேர்தல்கள், இடைத்தேர்தல்கள் ஆகிய அனைத்திலும் திமுக கூட்டணி தொடர் வெற்றியைப் பெற்று வந்துள்ளது.
கழக வேட்பாளர் சந்திரகுமார் அவர்களின் வெற்றிக்கு உழைத்த தேர்தல் பொறுப்பாளர்கள், சட்டமன்ற உறுப்பினர்கள், நாடாளுமன்ற உறுப்பினர்கள், கழக நிர்வாகிகள், நிர்வாகிகள், உடன்பிறப்புகள், தோழமைக் கட்சித் தலைவர்கள், தொண்டர்கள் சமூக அமைப்புகள், கட்சிகள் அனைவருக்கும் நன்றி.
எங்களது நன்றியின் அடையாளமாக எப்போதும் மக்களுக்கு உண்மையாக இருப்போம். ஈரோடு கிழக்கு தொகுதியை மட்டுமின்றி மேற்கு மண்டலம் முழுவதையும் மேம்படுத்தத் தேவையான திட்டங்களைச் செயல்படுத்திக் காட்டுவோம்.