தமிழ்நாடு முழுவதும் மக்கள் தைப்பொங்கல் பண்டிகையை கொண்டாடும் வகையில் ரேஷன் கடைப் பயனர்களுக்கு ரூ.1000 ரொக்கம், 1 கிலோ பச்சரிசி, 1 கிலோ சர்க்கரை, முழுக் கரும்பு ஒன்று பரிசு தொகுப்பாக வழக்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்தார். 19 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. அதன்படி அனைத்து பொருட்களும் கொள்முதல் பணிகள் நடைபெற்றது. இந்நிலையில், இன்று (ஜனவரி 9) திங்கட்கிழமை பொங்கல் பரிசுத் தொகுப்பு விநியோகத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
சென்னை ஆழ்வாா்பேட்டையில் உள்ள நியாயவிலைக் கடையில் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்கும் திட்டத்தை ஸ்டாலின் தொடங்கி வைக்கிறாா். வரும் 13-ம் தேதி வரை பொங்கல் தொகுப்பு வழங்கப்படும் என அரசு அறிவித்துள்ளது. நாள்தோறும் 200 பேருக்கு டோக்கன் முறையில் பரிசுத் தொகுப்பு வழங்கப்படுகிறது. இந்நிலையில், பல்வேறு காரணங்களுக்காக டோக்கன் பெறாத அரிசி அட்டைதாரர்கள் வருகிற 13-ம் தேதி (வெள்ளிக்கிழமை) அந்தந்த ரேஷன் கடைகளில் தங்களது ரேஷன் கார்டை கொண்டு சென்று பொங்கல் தொகுப்பினை பெற்றுக் கொள்ளலாம் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
பொங்கல் பரிசுத் தொகுப்பில் குளறுபடி, முறைகேடுகள் நடந்தால் பொதுமக்கள் 1967 மற்றும் 1800 425 5901 ஆகிய கட்டணமில்லா தொலைபேசி எண்களில் தொடர்பு கொண்டு புகார் அளிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/