முதல்வர் ஸ்டாலின் திருச்சி, தஞ்சை, திருவாரூர் பகுதிகளில் நடைபெறும் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்ள நாளை (பிப்ரவரி 21) தனி விமானம் மூலம் திருச்சி செல்கிறார். அவருக்கு அமைச்சர் கே.என்.நேரு தலைமையில் விமான நிலையத்தில் பிரம்மாண்ட வரவேற்பு அளிக்கப்பட உள்ளது.
அதன் பின்னர் கார் மூலம் தஞ்சை செல்லும் ஸ்டாலின், நேற்று மறைந்த முன்னாள் திமுக அமைச்சர் எஸ்.என்.எம். உபயதுல்லா இல்லத்திற்கு சென்று அவரது திருஉருவப்படத்திற்கு மலரஞ்சலி செலுத்தி உறவினர்களுக்கு ஆறுதல் தெரிவிக்கிறார். பின்னர் அங்கிருந்து திருவாரூர் செல்லும் முதல்வர் இரவு அங்கு ஓய்வு எடுக்கிறார்.
அதன் பின்னர் 22-ம் தேதி மன்னார்குடி மாவட்ட பஞ்சாயத்து தலைவர் தலையாமங்கலம் பாலு என்பவரின் மகன் திருமணத்தை தலைமை ஏற்று நடத்தி வைத்து உரையாற்றுகிறார். பிறகு திருவாரூர் மாவட்ட மக்களுக்கு பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்குகிறார். முடிவுற்ற திட்ட பணிகளை நேரடியாக கள ஆய்வு செய்த பின்னர் சென்னை திரும்ப திட்டமிடப்பட்டுள்ளது.
முதல்வர் வருகையையொட்டி திருச்சி, தஞ்சை, திருவாரூர் மாவட்டங்களில் அந்தந்த மாவட்ட திமுக மாவட்ட செயலாளர்கள் வரவேற்பு கொடுப்பதற்கு பிரமாண்ட ஏற்பாடுகளை செய்து வருகின்றனர். திருச்சியில் இருந்து சாலைமார்க்கமாக திருவாரூர் செல்வதால் திருச்சியில் இருந்து திருவாரூர் வரை பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகளை மத்திய மண்டல காவல்துறை தலைவர் கார்த்திகேயன் தலைமையில் காவல்துறையினர் சிறப்பு ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.
செய்தி: க. சண்முகவடிவேல்
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil/