சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதில் அமைச்சர்களின் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்று வருகிறது. தீர்மானங்கள், சட்ட மசோதாக்கள் நிறைவேற்றப்படுகிறது. துறை வாரியான அறிவிப்புகள் வெளியிடப்படுகிறது.
அந்த வகையில் இன்று (ஏப்ரல் 21) முதல்வர் ஸ்டாலினின் உள்துறை மானியக் கோரிக்கை மீதான விவாதம் நடைபெற்றது. இதில் ஸ்டாலின் கலந்து கொண்டு பேசினார். அப்போது, "அமைச்சர் உதயநிதி சொன்னதை சுட்டிக் காட்டி பேசினார். அண்ணா அமைச்சரவையில் இருந்த அமைச்சர்களின் ஒவ்வொரு துறையையும் குறிப்பிட்ட கலைஞர் கருணாநிதி, நாம் வகிக்க கூடிய துறைகள் வேறுபட்டிருந்தாலும் நாம் அனைவரும் அண்ணா துறை(துரை)யை சார்ந்தவர்கள் என்று குறிப்பிட்டு பேசியிருப்பார். அதை இங்கே அமைச்சர் உதயநிதி கூறினார்.
எனக்கு முதலில் தலைவர் கலைஞர் வைக்க நினைத்த பெயர் அய்யாதுரை. அமைச்சர்கள் அனைவரும் தனித் தனி துறைகள் விகித்தாலும் நீங்கள் அனைவரும் அய்யாதுரையைச் சேர்ந்தவர்கள் தான்" என்றார்.
தொடர்ந்து பேசிய அவர், "இன்னும் 2 வாரங்களில் தி.மு.க ஆட்சிப் பொறுப்பேற்று 2 ஆண்டுகள் முடிவடைய இருக்கிறது. 3-வது ஆண்டை தொடங்க உள்ளோம். இனி தமிழ்நாட்டை நிரந்தரமாக தி.மு.க தான் ஆள வேண்டும் என்று மக்கள் மனநிறைவுடன் முடிவெடுக்கும் வகையில் இந்த 2 ஆண்டு காலம் ஆட்சியை நடத்தி வருகிறோம். மிக மோசமான நிதி நெருக்கடி, நிதி மேலாண்மையில் ஒன்றிய அரசு உதவியின்மை என கடினமான சூழல் இருந்த போதிலும் மகத்தான சாதனைகளை நாட்டுக்கும் நாட்டு மக்களுக்கும் தி.மு.க அரசு செய்து கொடுத்திருக்கிறது" என்று பேசினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil