தமிழ்நாட்டில் இருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்திருந்த நிலையில் ராணுவத்தின் வடக்கு கமாண்ட் பிரிவு அப்பதிவை நீக்கியதாக கனிமொழி எம்.பி குற்றஞ்சாட்டி கேள்வி எழுப்பியுள்ளார்.
கன்னியாகுமரியைச் சேர்ந்த இக்னீஷியஸ் டெலாஸ் ஃப்ளோரா என்ற பெண், இந்திய ராணுவத்தில் மேஜர் ஜெனரலாக பதவி உயர்வு பெற்றுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த முதல் பெண்மணி இந்த பொறுப்பை பெற்றதைத் தொடர்ந்து, அவருக்கு முதலமைச்சர் ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்து ட்விட்டரில் பதிவிட்டிருந்தார். பெண்களால் முன்னேறக் கூடும்- நம் வண்தமிழ் நாடும் எந்நாடும் என்று பதிவிட்டு ஸ்டாலின் வாழ்த்து தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஸ்டாலின் மறுபகிர்வு செய்து வெளியிட்டிருந்த இந்த வாழ்த்துப் பதிவை இந்திய ராணுவத்தின் வடக்கு கமாண்ட் பிரிவின் ட்விட்டர் கணக்கு நீக்கியுள்ளது. இதையடுத்து இப்பதிவு நீக்கப்பட்டதற்கான காரணம் மற்றும் பின்னணி என்ன என்பது குறித்து கனிமொழி எம்.பி கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து கனிமொழி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழ்நாடு முதலமைச்சர், தனது மாநிலத்திலிருந்து முதல் பெண்மணியாக மேஜர் ஜெனரல் பதவி உயர்வு பெற்றிருப்பவருக்கு வாழ்த்திய பதிவை ராணுவம் ஏன் நீக்க வேண்டும்? இதன் பின்னணி என்ன? என்று கேள்வி எழுப்பி பதிவிட்டுள்ளார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“