தமிழ்நாட்டிற்கு முதலீடுகளை ஈர்க்க 15 நாள் பயணமாக முதல்வர் ஸ்டாலின் நேற்று இரவு அமெரிக்கா புறப்பட்டு சென்றார். இதற்காக சென்னை விமான நிலையம் வந்தார். அப்போது, செய்தியாளர்களிடம் பேசிய அவர், "தமிழ்நாடு சிறக்க அயல்நாட்டுக்கு சிறகு விரிக்கிறேன்.
தமிழ்நாட்டின் வளர்ச்சியே அமெரிக்கா பயணத்தின் நோக்கம். முதலீடுகளை ஈர்க்க இதுபோன்ற பயணங்களை நான் மேற்கொண்டு வருகிறேன். ஐக்கிய அரபு அமீரகம், ஜப்பான், ஸ்பெயின் நாடுகளுக்கு முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஏற்கனவே சென்றேன். 3 ஆண்டுகளில் ரூ.9.99 லட்சம் கோடி மதிப்பில் 872 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் மூலம் 18.89 லட்சம் வேலைவாய்ப்புகள் கிடைக்கும். 2030-க்குள் தமிழ்நாட்டை ஒரு டிரில்லியன் டாலர் பொருளாதாரமாக மாற்றும் இலக்கை அடைய பயணம் மேற்கொள்கிறேன்" என்றார்.
தொடர்ந்து, ஸ்டாலினிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர். அமெரிக்கா பயணம் முடிந்தவுடன் தமிழ்நாடு அமைச்சரவையில் ஏதேனும் மாற்றம் இருக்குமா என்ற செய்தியாளரின் கேள்விக்கு, மாறுதல் ஒன்றே மாறாது என்றும் WAIT AND SEE என்றும் தெரிவித்தார்.
மேலும் ஒட்டுமொத்த முதலீடுகள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படுமா என்ற கேள்விக்கு பதிலளித்த அவர், வெள்ளை அறிக்கை வெளியிடுவது பொதுவாக வழக்கம் இல்லை. காரணம் பல மாநிலங்களில் அந்த முதலீடுகளைப் பெற போட்டி இருக்கிறது. முழுமையான முதலீடுகள் கிடைக்கப் பெற்றபின் அதை நிச்சயமாக வெளியிடுவோம் என்றார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“