முதல்வர் ஸ்டாலின் இன்று(ஆகஸ்ட் 16) மாலை தனி விமானம் மூலம் டெல்லி செல்கிறார். டெல்லி செல்லும் ஸ்டாலின் நாளை(ஆகஸ்ட் 17) குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் நரேந்திர மோடி ஆகியோரை சந்திப்பு பேசுகிறார். பிரதமரிடம் தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளிக்க உள்ளார்.
இந்தியாவில் முதல் முறையாக தமிழகத்தில் நடைபெற்ற செஸ் ஒலிம்பியாட் போட்டி சிறப்பாக நடைபெற்று முடிந்தது. கடந்த மாதம் 28ஆம் தேதி தொடங்கி 2 வாரங்கள் நடைபெற்ற இந்த போட்டியை பிரதமர் தொடங்கி வைத்தார். செஸ் ஒலிம்பியாட் போட்டியை சிறப்பாக நடத்தி முடித்ததற்கு பிரதமர் தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்திருந்தார்.
இந்தநிலையில் இன்று டெல்லி செல்லும் ஸ்டாலின் நாளை குடியரசுத் தலைவர், துணை குடியரசுத் தலைவர், பிரதமரை சந்திக்கிறார். குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள திரௌபதி முர்மு, துணை குடியரசுத் தலைவராக பொறுப்பேற்றுள்ள ஜெகதீப் தன்கர் ஆகியோருக்கு வாழ்த்து தெரிவிக்கிறார்.
தொடர்ந்து பிரதமரை சந்திக்கும் ஸ்டாலின், செஸ் ஒலிம்பியாட் போட்டிக்கு வந்ததற்கு நன்றி தெரிவிக்கிறார். ஜிஎஸ்டி நிலுவை தொகை, தமிழகத்திற்கான திட்டங்கள் குறித்த கோரிக்கை மனுவை அளிக்க உள்ளார். நேற்று தாம்பரம் அருகே முடிச்சூரில் நடந்த கிராம சபை கூட்டத்தில் திமுக நாடாளுமன்ற குழு தலைவரும், ஸ்ரீபெரும்புதூர் நாடாளுமன்ற உறுப்பினருமான டி.ஆர்.பாலு கலந்து கொண்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "டெல்லி செல்லும் முதல்வர் ஸ்டாலின் ஆகஸ்ட்17 பிரதமரை சந்திக்கிறார். பிரதமரிடம் தமிழக அரசின் திட்டங்கள் குறித்து பேசுகிறார். பல்வேறு திட்டங்களுக்கு தேவையான நிதி ஒதுக்கீடு குறித்து பேசுகிறார். குடியரசுத் தலைவர் அலுவலகத்திற்கு பல சட்ட வரைவுகள் அனுப்பபட்டிருக்கிறது. நிலுவையில் உள்ள சட்ட வரைவுகளுக்கு விரைந்து ஒப்புதல் அளிக்கும்படி கேட்டுக் கொள்வார்" என்று தெரிவித்தார். இதையடுத்து நாளை இரவு ஸ்டாலின் சென்னை திரும்புகிறார்.