CM Stalin’s Budget explanation meeting speech highlights: இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் அமித் ஷாவுக்கு போதுமா? என மறைமலை நகர் கூட்டத்தில் கேள்வி எழுப்பிய முதல்வர் ஸ்டாலின், தமிழ்நாட்டை முதல் மாநிலமாக மாற்றுவதே இலக்கு என உறுதி பூண்டுள்ளார்.
செங்கல்பட்டு மாவட்டம் மறைமலைநகரில் தமிழக அரசின் பட்ஜெட் விளக்க மற்றும் உள்ளாட்சி தேர்தல் வெற்றிக்கு நன்றி தெரிவிக்கும் பொதுக்கூட்டம் திமுக சார்பில் நடைபெற்றது. இந்த பொதுக்கூட்டத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சிறப்புரை ஆற்றினார்.
மு.க.ஸ்டாலின் தனது உரையில் பேசியதாவது,
நிதிநிலை அறிக்கை விளக்க பொதுக்கூட்டம் நடத்தவே கட்சியினருக்கு தலைமை சார்பாக உத்தரவிடப்பட்டது. ஆனால், இங்கு வந்து பார்த்தபோது பொதுக்கூட்டம் மாநாடாகவே காட்சியளிக்கிறது. மக்களோடு மக்களாக நம்மை இணைப்பது இதுபோன்ற பொதுக்கூட்டங்கள்தான். உடன்பிறப்பு என்ற பாசப்பிணைப்புடன் உருவாக்கப்பட்ட இயக்கம் தான் திமுக. மக்களோடு மக்களாக எப்போதும் தன்னை இணைத்துக் கொள்ளும் இயக்கம்தான் திமுக.
எனது வாழ்வில் மிகப்பெரிய மாற்றத்தை உருவாக்கிய ஊர் செங்கல்பட்டு. நான் முதல்வராவதற்கு அடித்தளம் அமைத்த ஊர் மதுராந்தகம் தான். திமுக அரசு மீது நம்பிக்கை வைத்து வாக்களித்தவர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன். எதிர்கட்சியாக இருந்தபோதே நாடாளுமன்றத் தேர்தலில் திமுக மிகப்பெரிய வெற்றியைப் பெற்றது.
இதையும் படியுங்கள்: பனகல் பூங்காவை கிழித்துச் செல்லும் மெட்ரோ: 3000 ச.மீ ஒப்படைக்க சென்னை மாநகராட்சி ஒப்புதல்
இந்தியாவின் முன்மாதிரி மாநிலமாக தமிழ்நாட்டை உருவாக்குவதே திமுக ஆட்சியின் இலக்கு. தமிழ்நாடு நம்பர் 1 மாநிலமாக உருவாக நான் மட்டும் உழைத்தால் போதாது, நாம் அனைவரும் உழைக்க வேண்டும். இந்தியாவின் அனைத்து மாநிலங்களுக்கும் முன்மாதிரி பட்ஜெட்டாக தமிழக பட்ஜெட் உள்ளது. பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்ட திட்டங்களை நிறைவேற்றும்போது தமிழ்நாடு, தலைசிறந்த மாநிலமாக மாறும்.
கடந்த 10 ஆண்டுகளாக பாதாளத்தில் கிடந்த தமிழ்நாட்டை, பத்து மாதங்களில் தலைநிமிர வைத்திருக்கிறோம். தமிழ்நாட்டில் கொரோனாவுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர்.
எல்லாருக்கும் எல்லாம் கிடைப்பதும், கிடைக்க வைப்பதும் தான் திராவிட மாடல் ஆட்சி. தகுதிக்கேற்ப வேலை, இல்லம் தேடி மருத்துவ வசதி, சமூக நீதி ஆட்சி போன்றவையே திராவிட மாடல் ஆட்சி. திமுக ஆட்சியில் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் இரும்பு கரம் கொண்டு ஒடுக்கப்பட்டு வருகிறது. கேரளாவில் எனக்கு கிடைத்த வரவேற்பு தமிழ்நாட்டு மக்களுக்கு கிடைத்த மரியாதை.
இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும் மத்திய அமைச்சர் அமித்ஷாவுக்குப் போதுமா? இந்தியா என்பது இந்தி பேசும் மாநிலங்கள் மட்டும்தானா? எங்கள் மொழிக்கும் பண்பாட்டிற்கும் தனித்துவம் இருக்கிறது. இவ்வாறு ஸ்டாலின் உரையாற்றினார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.