சென்னை, கிளாம்பாக்கத்தில் புதிதாக திறக்கப்பட்டுள்ள, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தை, அவசரகதியில் திறந்து வைத்ததால், மக்கள் அவதிப்படுவதாக எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி சட்டப்பேரவையில் பேசினார். இதற்கு பதிலளித்த முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், நேரில் வந்தால், என்ன குறை என்று கூறினால், நிவர்த்தி செய்கிறோம் என்று கூறினார்.
இதைத் தொடர்ந்து, தமிழில் வாரமிருமுறை வெளியாகும் இதழ் ஒன்றில், ஸ்பாட் விசிட் செய்து கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தின் டாப் 10 பிரச்னைகள், சரிசெய்யுமா அரசு என்று கேள்வி எழுப்பி ஒரு செய்திக் கட்டுரை வெளியிட்டிருந்தது. இதற்கு, சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (சி.எம்.டி.ஏ) பதிலளித்து அறிக்கை வெளியிட்டுள்ளது.
இது குறித்து சி.எம்.டி.ஏ எக்ஸ் பக்கத்தில் பதிலளித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: “போதுமான போக்குவரத்து இணைப்பு இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்ட புகாருக்கு சி.எம்.டி.ஏ வெளியிட்டுள்ள பதிலில், “கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையும் திறக்கப்பட்ட பின்னர் சென்னை மாநகர பகுதிகளையும் புதிய கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தை இணைக்கும் வகையில் சென்னை மாநகர் போக்குவரத்து கழக பேருந்துகள் (எம்.டி.சி) மூலம் 498 வழக்கமான பேருந்துகளும் மற்றும் நெரிசல் மிகுந்த நேரங்களில் 200 சிறப்பு பேருந்துகளும் ஆக மொத்தம் 698 எம்.டி.சி பேருந்துகள் மூலம் 4651 நடைகள் இருவழி புறப்பாடுகளாக இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனைய கட்டிடத்திற்கும் சென்னை மாநகர போக்குவரத்துக் கழக பேருந்து நிலையத்திற்கும் இடையே 4 மினி பேருந்துகள் கட்டணமில்லா பேருந்துகளாக இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், வண்டலூர் மற்றும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு இடையே 2 மினிபேருந்துகள் கட்டண இணைப்பு சேவை பெறுவதற்காக இயக்கப்பட்டு வருகின்றன.
மேலும், கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கும் (கே.சி.பி.டி) கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கும் 5 நிமிடத்திற்கு ஒருமுறை சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி) பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன. இதைத்தவிர, கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கும் கே.சி.பி.டி மற்றும் தாம்பரம் பேருந்து நிலையத்திற்கும் 2 நிமிடத்திற்கு ஒரு முறையும் 6 பேருந்துகள் பாயிண்டு பாயிண்ட் பேருந்துகளாகவும் அதேபோல கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கும் (கே.சி.பி.டி மற்றும் கிண்டி பேருந்து நிலையத்திற்கும் இடையே 3 நிமிடத்திற்கு ஒருமுறை பேருந்து சேவைகள் இயக்கப்பட்டு வருகின்றன. மேலும், இம்முணையத்திலிருந்து சோழிங்கநல்லூர், வேளச்சேரி, திருவான்மியூர், தி. நகர், மாதவரம், அம்பத்தூர் திரு.வி.க நகர் ரெட்ஹில்ஸ், ஆவடி மற்றும் பூந்தமல்லி போன்ற முக்கிய நகரத்திற்கும் சென்னை மாநகர் போக்குவரத்துக் கழகம் (எம்.டி.சி) பேருந்துகள் இயக்கப்படுகின்றன. மேலும், கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை கருத்தில் கொண்டு பொதுமக்கள் மற்றும் பயணிகளுக்கு பேருதவியாக இருக்கும் வகையில் அங்கு இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு புதிய கிளாம்பாக்கம் ரயில் நிலையம் அமைப்பதற்கு ஒப்புதல் பெறப்பட்டு ரூபாய் 20 கோடி ரயில்வேத் துறைக்கு வழங்கப்பட்டு பணிகள் தற்போது தொடங்கியுள்ளது. இப்பணிகள் ஆறு மாத காலத்திற்குள் முடிக்கப்படும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், சென்னை மாநகரத்திலிருந்து விரைவான போக்குவரத்தினை உறுதி செய்யும் வகையில் சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் மூன்றாம் கட்ட மெட்ரோ ரயில் பணிகள் கிளாம்பாக்கத்தில் அமைக்க தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
சாலையை கடப்பதற்கு பயணிகள் திண்டாடுவதாக சுட்டிக் காட்டப்பட்டுள்ளதற்கு சி.எம்.டி.ஏ அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“இந்த அரசு பொறுப்பேற்ற பிறகு கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையம் திறக்கப்பட்ட பின்னர் பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையிலும் மற்றும் எளிதாக சாலையை கடக்கும் வகையிலும் புதிதாக அமைக்கப்பட உள்ள ரயில் நிலையத்திற்கு நேரடியாக பேருந்து நிலையத்தை சென்றடையும் வகையிலும் ஒரு புதிய நடை மேம்பாலம் ரூ.75 கோடி மதிப்பீட்டில் அமைக்க ஒப்பந்தப்பு புள்ளி கோரப்பட்டு அதற்குரிய பணிகள் விரைவில் தொடங்கப்படும். இந்நிலையில் தற்காலிகமாக கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கும் (எம்.டி.சி) பேருந்து நிலையத்திற்கும் எதிரில் ஜி.எஸ்.டி சாலையின் குறுக்கே பயணிகள் சாலையை எளிதில் கடக்கும் வகையில் ஒரு பாதை அமைக்க முடிவு செய்யப்பட்டு அதற்குரிய பணியில் விரைவில் தொடங்கும்.” என்று சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.
ஆம்னி பேருந்துகளுக்கான இடவசதி இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதற்கு சி.எம்.டி.ஏ அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகள் பயணிகளை ஏற்றுவதற்கும் இறக்குவதற்கு மட்டுமே 5 நடை மேடைகளில் 77 பெருந்துகள் நிறுத்துமிடம் ஒதுக்கப்பட்டிருக்கிறது. இதைத்தவிர இயக்கப்படாத ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு ஏதுவாக பேருந்து முனைய பிரதான கட்டிடத்திற்கு எதிரே 300 ஆம்னி பேருந்துகள் நிறுத்துவதற்கு உண்டான இடவசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
மேலும், கூடுதலாக காஞ்சிபுரம் மாவட்டம், சென்னை வெளிவட்ட சாலை முடிச்சூரில் கட்டப்பட்டு வரும் புதிய ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தும் (Idle Parking for Omni Buses) 5 ஏக்கர் பரப்பளவில் ரூ. 27.98 கோடி மதிப்பீட்டில் 150 பேருந்துகள் நிறுத்துமிடம் 1-வது கட்டத்தில்: தரைத்தளம் உணவகம் முதல் தளம் தங்கும் முறைகள் (Dormitory) (5,388 சதுர அடி) இரண்டாவது தளத்தில் ஆபரேட்டர் அறை (500 சதுர அடி) என மொத்தம் 300 எண்ணிக்கையிலான தங்கும் அறைகள் கட்டப்பட்டு வருகிறது. இக்கட்டடமானது முழுமையாக பணிகள் நிறைவு செய்யப்பட்டு ஏப்ரல் மாத இறுதிக்குள் கட்டி முடிக்கப்பட்டு ஆம்னி பேருந்து நிறுத்துவதற்கு உண்டான இட வசதிகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
போதுமான டிக்கெட் புக்கிங் ஆபீஸ் இல்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளதற்கு சி.எம்.டி.ஏ அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“ஏற்கனவே கோயம்பேடு பேருந்து நிலையத்தில் ஆம்னி பேருந்துகளுக்கென 5200 சதுர அடியில் 52 டிக்கெட் புக்கிங் அலுவலகம் செயல்பட்டு வந்தது. தற்பொழுது கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் 7000 சதுர அடியில் 27 கடைகள் பெரிய அளவில் ஒதுக்கீடு செய்யப்பட்டு அவற்றுள் சிறு சிறு பிரிவுகளாக 50-க்கும் மேற்பட்ட ஆம்னி பேருந்துகளுக்கான டிக்கெட் புக்கிங் அலுவலகம் அமைக்க வழிவகை உள்ளது.” என்று சி.எம்.டி.ஏ விளக்கத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து நிலையம் பகுதியில், ஆட்டோ, கால் டாக்ஸி கட்டனம் அதிக அளவில் இருப்பதாகக் கூறி, “காலை வரும் ஆட்டோ கால் டாக்ஸி கட்டணம்” என்று சுட்டிக் காட்டப்பட்டதற்கு, சி.எம்.டி.ஏ அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது:
“கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் ஆட்டோ சங்கங்களின் கூட்டமைப்பு மூலம் ப்ரீபெய்டு ஆட்டோ முன்பதிவு மையம் நடத்தப்பட்டு வருகிறது. அந்த மையத்தில் தூரம் அடிப்படையில் அரசால் நிர்ணயிக்கப்பட்ட உரிய கட்டணம் மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகிறது. மேலும், வாடகை கார்கள் ஓட்டுநர்கள் சங்கம் மூலம் முன்பதிவு மையம் நடத்தப்பட்டு வரும் நிலையில் அங்கு பேருந்து நிலையம் முன்பதிவு மையங்களில் செயல்பாடுகளையும் ப்ரீபெய்ட் ஆட்டோ கட்டணத்தையும் தொடர்ந்து போக்குவரத்து துறை அலுவலர்கள் மூலம் கண்காணித்து வருகின்றனர். தூரம் அடிப்படையில் பொதுமக்கள் பயன்பாட்டிற்கான கால் டாக்ஸி வாடகை கட்டணம் அவர்களால் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதை தவிர, பொதுமக்கள் தங்கள் ஆன்லைன் செயலியின் மூலம் நேரடியாக முன் பதிவு செய்து பயணம் மேற்கொள்கின்றனர். மேலும், அதிக அளவிலான கட்டணம் வசூலிக்கும் ஆட்டோ ஓட்டுநர்கள் மீதும் போக்குவரத்து துறை மூலம் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.
மேலும், ஒரு நாளுக்கு 1 லட்சம் பயணிகளைக் கையாளும் கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில் உணவகங்களின் எண்ணிக்கை போதவில்லை என்பதைக் குறிப்பிடும் விதமாக, “ஒரு லட்சம் பேருக்கு இரண்டு உணவகங்களா?” என்று கேள்வி எழுப்பியிருந்ததற்கு, சி.எம்.டி.ஏ பதில் அளித்துள்ளது. அதில் கூறியிருப்பதாவது:
“கிளாம்பாக்கம் பேருந்து முனையம் திறக்கப்பட்ட பின்னர் தற்பொழுது 3 உணவகங்கள் திறக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. முனையத்தில் இருக்கக்கூடிய அனைத்து கடைகளையும் நிர்வகிக்கும் பொறுப்பு பி.வி.ஜி நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள நிலையில் தற்போது வரை 55 கடைகளுடன் அந்நிறுவனம் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளது. விரைவில் கடைகள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும். அவற்றில் பல்வேறு உணவுகள் உள்ளன. மேலும், விரைவில் தரமான மற்றும் சுகாதாரமான முறையில் மலிவு விலை உணவகங்கள் அங்கு அமைக்கப்பட உள்ளது.” என்று சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், “போதுமான தேனீர் கடைகள் இல்லை” என்று சுட்டிக்காட்டபட்டுள்ளதற்கு, “கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் தற்பொழுது 2 ஆவின் பாலகங்கள் மற்றும் 2 சிற்றுண்டி உணவகங்கள் மூலம் பால், டீ, காபி ஆகியவை வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், டேன்டீ நிறுவனம் மூலம் 2 கடைகள் அமைப்பதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இதைத் தவிர பி.வி.ஜி நிறுவனம் 55 கடைகளுடன் ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ள நிலையில் போதுமான தேநீர் கடைகள் விரைவில் திறக்கப்படும்.” என்று சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், வங்கி ஏ.டி.எம் இல்லை என்று சுட்டிக் காட்டப்பட்டுள்ளதற்கு சி.எம்.டி.ஏ அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: “கிளாம்பாக்கம் பேருந்து முனைய நுழைவு வாயிலில் தற்காலிகமாக 3 மொபைல் ஏ.டி.எம் வாகனங்கள் சுழற்சி முறையில் இயங்கி வருகின்றன. நிரந்தர ஏ.டி.எம்.கள் பொருத்தும் பொருட்டு பி.வி.ஜி நிறுவனம் மூலமாக இந்தியன் வங்கி, கனரா வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, பாரத ஸ்டேட் வங்கி, ஐ.சி.ஐ.சி.ஐ வங்கி, ஹிட்டாச்சி ஆகிய 8 வங்கிகளுக்கு இடம் ஒதுக்கீடு செய்யப்பட்டு விரைவில் வருவதற்கு உண்டான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்ரு தெரிவிக்கப்படுள்ளது.
கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில், அடிப்படை வசதிகள் செயல்படவில்லை என்று சுட்டிக்காட்டப்பட்டதற்கு, சி.எம்.டி.ஏ அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: “கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்திற்கு வரக்கூடிய பயணிகளுக்கு தொடர்ச்சியாக மாநகரம் முழுவதும் செல்லும் வகையில் பேருந்துகள் இயக்கப்பட்டு வருகிறது எனினும் பயணிகள் ஓய்வெடுக்க வசதியாக 100 ஆண்கள் தங்கும் அறைகள் மற்றும் 40 பெண்கள் தங்கும் முறைகள் என 140 பயணிகளுக்கான தங்கும் அறை வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், பயணிகளின் பொருட்களை பாதுகாப்பாக வைப்பதற்கு கிளாக் ரூம் மற்றும் தங்கும் அறைகளிலும் தேவையான உட்கட்டமைப்பு வசதிகள் ஏற்படுத்தும் பணி பி.வி.ஜி நிறுவனத்தின் மூலம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது விரைவில் பயணிகளின் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.” என்று சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.
மேலும், வார இறுதி நாட்களில் மக்கள் சென்னையில் இருந்து அதிக அளவில் தங்கள் செல்வார்கள் என்பதால், கிளாம்பாக்கம் பேருந்து முனையத்தில், வார இறுதி நாட்களில் போதுமான பேருந்துகள் இல்லை என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளதற்கு சி.எம்.டி.ஏ அளித்துள்ள பதிலில் கூறியிருப்பதாவது: “கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் அரசு விரைவு போக்குவரத்து கழகம் (எஸ்.இ.டி.சி) மூலமாக 361 பேருந்துகளும் தமிழ்நாடு அரசு போக்குவரத்துக் கழகங்கள் டி.என்.எஸ்.டி.சி மூலமாக 734 பேருந்துகளும் அனைத்து நாட்களிலும் இயக்கப்பட்டு வருகின்றன.
இது தவிர கூடுதலாக வார விடுமுறை தினங்கள் முகூர்த்த நாட்கள் பண்டிகை தினங்கள் விழாக்கள் உள்ளிட்ட முக்கிய தினங்களில் சிறப்பு பேருந்துகளும் தேவைக்கு ஏற்ப கூட்ட நெரிசலை தவிர்க்கும் வகையில் இயக்கப்பட்டு வருகின்றன.
தற்போது வட சென்னை மக்களின் பயன்பாட்டுக்காக மாதவரத்தில் இருந்து 20% பேருந்துகள் இயக்கப்பட்டு வரும் நிலையில், கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் 16.02.2024 முதல் ஏற்கனவே இயக்கப்பட்டு வரும் வழக்கமான பேருந்துகளுடன், தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் கூடுதலாக தினசரி 120 பேருந்துகள் இயக்கப்பட்டு வருகின்றன.
இதன் மூலம் தமிழ்நாடு அரசின் பல்வேறு போக்குவரத்து கழகங்கள் மொத்தம் 1215 பேருந்துகள் தினசரி இயக்கப்பட்டு வருவதுடன் முக்கிய தினங்களிலும் வார விடுமுறை நாட்களிலும் கூடுதலாக தேவைக்கு ஏற்ப சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டு வருகிறது. உதாரணமாக கடந்த 16.02.2024 அன்று வழக்கமான பேருந்துகளுடன் 404 சிறப்பு பேருந்துகளும் இயக்கப்பட்டுள்ளன.” என்று சி.எம்.டி.ஏ தெரிவித்துள்ளது.
“பேருந்துகளில் பயணிக்காதவர்கள் தான் பிரச்சனைகளை எழுப்பி வருகின்றனர் என்கிறார் போக்குவரத்து துறை அமைச்சர். 45 நாட்களில் அடிப்படை வசதிகளை சரி செய்து விட்டோம் என்கிறார் சி.எம்.டி.ஏ தலைவர். அனைத்து பிரச்னைகளையும் தீர்த்து வைத்து தான் பேருந்து நிலையத்தைத் திறந்து வைத்திருக்கிறோம் என்கிறார் முதல்வர். ஆனால், மக்கள் அவதிப்பட்டு கொண்டிருக்கிறார்களே, அவர்கள் எதை நம்ம்புவார்கள்?” என்று வாரமிருமுறை வெளியாகும் இதழ் எழுப்பியுள்ளது.
இந்த கேள்விக்கு சி.எம்.டி.ஏ விரிவாக பதிலளித்துள்ளது. அதில் சி.எம்.டி.ஏ கூறியிருப்பதாவது: “சென்னையில் ஏற்பட்டுள்ள போக்குவரத்து நெரிசலை கருத்தில் கொண்டும் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையத்தின் நெருசலை கருத்தில் கொண்டும் கடந்த ஆட்சியில் 2013-ம் ஆண்டு செங்கல்பட்டு மாவட்டம் கிளாம்பாக்கத்தில் ஒரு புதிய புறநகர் பேருந்து நிலையம் அமைக்கப்படும் என அறிவிக்கப்பட்டது. அதனைத் தொடர்ந்து 08.03. 2019 அன்று இதற்கான கட்டுமான பணிகள் துவக்கப்பட்டது. இப்பணிக்கு வழங்கப்பட்ட பணியாணையின்படி இப்பேருந்து முனைய கட்டுமான பணிகள் இரண்டு ஆண்டு காலத்திற்குள் (07.03.2021) முடிக்கப்பட்டிருக்க வேண்டும்.
எனினும் உரிய காலத்திற்குள் கட்டுமான பணிகள் முடிக்கப்படாத நிலையில் இவ்வரசு பொறுப்பேற்ற முதல் சென்னை மாநகரில் பெருகிவரும் மக்கள் தொகை எண்ணிக்கை போக்குவரத்து மற்றும் உள்கட்ட அமைப்பு மேம்பாடு, பொருளாதார மேம்பாடு, நகர்ப்புற வீட்டு வசதி சமூக உட்கட்டமைப்பு, சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் உள்ளிட்ட தேவைகளை கருத்தில் கொண்டு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் அறிவுறுத்தலின் பேரில் இப்பணிகளை விரைந்து மேற்கொண்டு ரூ. 393.74 கோடி மதிப்பில் 88.52 ஏக்கர் பரப்பளவில் இந்தியாவின் மிகப்பெரிய பேருந்து நிலையங்களுள் ஒன்றான கலைஞர் நூற்றாண்டு பேருந்து நிலையத்தை மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் 30.12.2023 அன்று திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார்கள்.
கடந்த ஆட்சியில் கிளாம்பாக்கம் பேருந்து முனைய கட்டுமானம் திட்டமிடப்பட்ட போது இப்பேருந்து நிலையத்திற்கு சென்னை மாநகரத்துடன் இணைக்கும் போட்டு எவ்வித இணைப்பு வசதிகளும் முறையாக திட்டமிடப்படவில்லை. குறிப்பாக சென்னை மாநகரத்திலிருந்து கிளாம்பாக்கம் புதிய பேருந்து முனையத்திற்கு எளிதில் வந்து செல்லும் வகையில் தேவையான ரயில் இணைப்பு வசதி தொடர்பாகவும் ஆம்னி பேருந்துகளை இயக்குவது குறித்தும் அவர்களுக்கான பார்க்கிங் வசதிகள் குறித்தும் எவ்வித முன் திட்டமிடலும் கடந்த ஆட்சியில் மேற்கொள்ளப்படவில்லை.
எனவே இவ்வரசு பொறுப்பேற்ற முதல் கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தில் விடுபட்ட மற்றும் திட்டமிடப்படாத வசதிகள் குறித்து ஆய்வு செய்யப்பட்டு போர்க்கால அடிப்படையில் ஜி.எஸ்.டி சாலையில் சுமார் ரூ.17.00 கோடி செலவில் 1200 மீட்டர் நீளத்திற்கு பிரத்தியேக மழை நீர் வடிகால் கால்வாய்கள் அமைக்கப்பட்டு தற்போது பயன்பாட்டிற்கு கொண்டுவரப்பட்டுள்ளது. அப்பகுதியில் வெள்ள நீரை வெளியேற்றும் வகையில் ரயில்வேக்கு சொந்தமான நிலங்களில் கால்வாய்கள் அமைக்கவும் புதிதாக ஒரு சிறு பாலத்தை அமைக்கவும் முடிவு செய்யப்பட்டு ரூ. 8.16 கோடி நிதி ரயில்வே துறைக்கு வழங்கப்பட்டு பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளன. இப்பேருந்து முனையத்திற்கு வரும் பயணிகளுக்கு பயன்படும் வகையில், 6 ஏக்கர் பரப்பளவில் ரூ. 12.00 கோடி மதிப்பீட்டில், ஒரு நீரூற்றுப் பூங்கா ஏற்கனவே அமைக்கப்பட்டுள்ளது. இது தவிர சுமார் 16 ஏக்கர் பரப்பளவில் ரூ. 15.20 கோடி மதிப்பீட்டில் ஒரு காலநிலை பூங்காவும் தற்போது அமைக்கப்பட்டு வருகிறது. விரைவில் அவை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வரப்படும்.
மேலும், கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்திற்கு எம்.டி.சி பேருந்து நிலையத்திற்கும் எதிரில் ஜி.எஸ்.டி சாலையின் குறுக்கே பொதுமக்கள் மற்றும் பயணிகள் பயன்பெறும் வகையிலும் மற்றும் எளிதாக சாலையை கடப்பதற்கு ஏதுவாக ரூபாய் 75 கோடி மதிப்பீட்டில் புதிய நடை மேம்பாலம் (Skywalk), ரூ. 20 கோடி மதிப்பீட்டில் கிளாம்பாக்கம் புதிய ரயில் நிலையம், சென்னை மெட்ரோ ரயில் நிறுவனத்தின் (சி.எம்.ஆர்.எல்) சார்பில் விரைவில் புதிய மெட்ரோ ரயில் நிலையம் முடிச்சூரில் ரூ. 27.98 கோடி மதிப்பீட்டில் 5 ஏக்கர் பரப்பளவில் 150 ஆம்னி பேருந்துகளுக்கான நிறுத்தமிடம் (Idle Parking for Omni Buses) பொதுமக்கள் மற்றும் பயணிகளின் பாதுகாப்பினை கருத்தில் கொண்டு இப்பேருந்து முனையத்தில் ரூ. 14.30 கோடி மதிப்பீட்டில் புதிய காவல் நிலையம் கட்டுமான பணிகள் நடைபெற்று வருகின்றன. எனவே, மக்கள் முழுமையாக மகிழ்ச்சியோடு பயன்படுத்துகின்ற அளவிற்கு அனைத்து தேவையான கூடுதல் வசதிகளும் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் செயல்பட்டு வருகிறது.
ஆகவே கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தில் பயணிகளுக்காக ஏற்கனவே பெரும் அளவிலான வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ள நிலையில், பயணிகளுக்கு பாதுகாப்பான மற்றும் மகிழ்ச்சியான பயண அனுபவித்தினை உறுதி செய்யும் வகையில் கிளாம்பாக்கம் கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையத்தின் மீது இவ்வரசு தனிகவனம் செலுத்தி பல்வேறு பணிகளை தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது” என்று சி.எம்.டி.ஏ விளக்கம் அளித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.