சென்னை செம்மஞ்சேரியில் அமையவுள்ள ‘மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி’ என்றழைக்கப்படும் அதிநவீன விளையாட்டு நகரத்துக்கான, சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சிக் குழுமம் (CMDA) டெண்டர் கோரியுள்ளது.
தமிழக அரசு சார்பில் கடந்த ஆண்டு மெகா ஸ்போர்ட்ஸ் சிட்டி எனும் மெகா விளையாட்டு நகரம் என்ற திட்டம் அறிவிக்கப்பட்டது. இந்த மெகா விளையாட்டு நகரத்தை நிர்மாணிக்கும் திட்டம் சட்டப்பேரவையில் அறிவிக்கப்பட்டதை அடுத்து, அதற்கான முதற்கட்ட பணிகளை தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. தொடர்ந்து விளையாட்டு நகரத்துக்கான ஆயத்த பணிகளை தமிழ்நாடு தொழில் வளர்ச்சிக் கழகம் தொடங்கியது.
இந்தநிலையில், 105 ஏக்கர் பரப்பளவில் சர்வதேச தரத்திலான மெகா விளையாட்டு நகரம் சென்னையை அடுத்த செம்மஞ்சேரியில் அமைய உள்ளது. இந்த விளையாட்டு நகரத்தில் ஒரேநேரத்தில் நூற்றுக்கணக்கான வீரர்கள் பயிற்சி பெறும் வகையில் கட்டமைப்புகள் ஏற்படுத்தப்படவுள்ளன. மேலும் சர்வதேச அளவில் போட்டிகள் நடைபெறும்போது வெளிநாட்டு வீரர்கள் வந்து செல்ல வசதியாக சென்னை விமான நிலையத்துக்கு அருகே இந்த விளையாட்டு நகரத்தை அமைக்கவும் அரசு திட்டமிட்டிருந்தது.
இங்கு நீச்சல் வளாகம், பாட்மிண்டன், டேபிள் டென்னிஸ், வாலிபால், ஜிம்னாஸ்டிக் பயிற்சிக் கூடங்கள், ஹாக்கி ஸ்டேடியம் என 20-க்கும் மேற்பட்ட விளையாட்டு அரங்குகள் அமையவுள்ளன. மேலும் இந்த வளாகத்தில் வீரர்கள் தங்கி பயிற்சி எடுக்கும் வகையில் பயிற்சிக் கூடங்கள், தங்கும் அறைகள், பணியாளர்களுக்கான குடியிருப்புகள், உணவகங்கள், ஓடுதளங்கள் உட்பட அடிப்படை வசதிகளை ஏற்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
இதற்கான சாத்தியக்கூறுகளை ஆராய டெண்டர் மூலம் நிபுணர் குழுவை நியமிக்கவும் அரசு முடிவு செய்தது. இந்த விளையாட்டு நகரம் தொடர்பான ஆய்வுக் கூட்டம் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற போது, மெகா விளையாட்டு நகரம் அமைவதற்கான சாத்தியக்கூறுகள் உள்ள 3 இடங்கள் தொடர்பாக சி.எம்.டி.ஏ அதிகாரிகள் தரப்பில் அறிக்கை வழங்கப்பட்டது. இதன்படி, செம்மஞ்சேரி, குந்தம்பாக்கம், வண்டலூர் ஆகிய 3 இடங்களில் மெகா விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்திய கூறுகள் இருப்பதாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டிருந்தது. இறுதியாக செம்மஞ்சேரியில் இந்த பணிகள் அனைத்தும் தொடங்கும் என்று முடிவு செய்யப்பட்டது.
தற்போது செம்மஞ்சேரியில் சர்வதேச தரத்திலான விளையாட்டு நகரம் அமைப்பதற்கான சாத்தியக்கூறுகள் தீவிரமாக ஆராயப்பட்டு வருகின்றன. இந்த வகையில் விளையாட்டு நகரத்துக்கான தொழில்நுட்ப, பொருளாதர சாத்தியக்கூறு அறிக்கை தயார் செய்ய சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் தற்போது டெண்டர் கோரியுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“