வண்டலூர் அருகே கிளாம்பாக்கத்திலும் திருமழிசை அருகே குத்தம்பாக்கத்தில் அமையும் இரண்டு புதிய பேருந்து நிலையங்களை பராமரித்து நிர்வகிக்கும் பொறுப்பை தனியாரிடம் ஒப்படைப்பது குறித்து கலந்தாலோசகரை சி.எம்.டி.ஏ முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
சென்னையில் நாளுக்கு நாள் சென்னை போக்குவரத்து நெரிசலுக்கு தீர்வு காணும் வகையில், செங்கல்பட்டு மாவட்டம், வண்டலுார் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் ரூ. 400 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. அதே போல, திருவள்ளூர் மாவட்டம், திருமழிசை அருகே உள்ள குத்தம்பாக்கத்தில், ரூ. 300 கோடி மதிப்பில் புதிய பேருந்து நிலையம் கட்டப்படுகிறது. இந்த இரண்டு புதிய பேருந்து நிலையங்களும் செயல்படும்போது, போக்குவரத்து நெரிசல் ஓரளவு கட்டுப்பாட்டுக்குள் வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
கிளாம்பாக்கத்தில் கட்டப்பட்டுவரும் புதிய பேருந்து நிலையத்தின் கட்டுமானப் பணிகள் 60 சதவீதத்திற்கும் மேல் முடிந்துள்ளது. இந்த புதிய பேருந்து நிலையத்தின் அனைத்து பணிகளும் முடிவடைந்த பிறகு, அடுத்த ஆண்டு திறக்கப்பட்டு பயன்பாட்டிற்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதனால், புதிய பேருந்து நிலையத்தின் மீதம் உள்ள பணிகள் வேகமாக நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில், கிளம்பாக்கம் மற்றும் குத்தம்பாக்கத்தில் கட்டப்பட்டு வரும் இரண்டு புதிய பஸ் நிலையங்களையும் பராமரிப்பது மற்றும் நிர்வகிக்கும் பொறுப்பை ஒப்பந்த அடிப்படையில் தனியாரிடம் விட சி.எம்.டி.ஏ. முடிவுகள் செய்துள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
கிளாம்பாக்கம் புதிய பேருந்து நிலையத்தை பராமரித்து நிர்வகிக்கும் தனியார் வசம் ஒப்படைப்பதற்கும் அதற்கான வழிமுறைகளை வகுப்பதற்கான கலந்தாலோசகராக, சர்வதேச ரியல் எஸ்டேட் சந்தை நிலவர ஆய்வு பணியில் ஈடுபட்டுள்ள ஜே.எல்.எல். நிறுவனம் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.
"தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil”