சென்னை மெட்ரோ ரயிலின் பெட்டிகளின் நிறத்தை மாற்றுவதற்கான திட்டம் பரீசிலனையில் உள்ளதாக மெட்ரோ ரயில் நிறுவன அதிகாரி தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக, சென்னை மெட்ரோ ரயில் நிறுவன மூத்த செயல் அதிகாரி கூறியதாவது, சென்னையில் மெட்ரோ ரயில் சேவை, இரண்டு கட்டங்களாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. முதற்கட்ட பணிகள் நிறைவடைந்து தற்போது அந்த தடங்களில் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2ம் கட்ட திட்டத்திற்கான பணிகள் துவங்கி உள்ளன.
ரூ. 69,180 கோடி மதிப்பிலான இந்த இரண்டாம் கட்ட திட்டத்திற்காக ஜப்பான் இன்டர்நேஷனல் கோ ஆபரேசன் ஏஜென்சி ரூ.20,196 கோடியை கடனுதவியாக வழங்கியுள்ளது. இரண்டாம் கட்ட திட்டத்தில் 66 கி.மீ தொலைவிற்கு மெட்ரோ ரயில் திட்ட பணிகள் நடக்க உள்ளன. இந்த ரூ.20 ஆயிரம் கோடி நிதியில், மாதவரம் - கோயம்பேடு மற்றும் மாதவரம் - சோழிங்கநல்லூர் வழித்தடங்களில் priority corridors மட்டுமே அமைக்க முடியும். மீத தொகைக்கு, சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம், பல்வேறு வங்கிகளிடமிருந்து கடனுதவி பெற பேச்சுவார்த்தை நடத்திவருகிறது. இந்தாண்டு இறுதிக்குள் 66 கி.மீ தொலைவிற்கு பணிகள் மேற்கொள்ள தேவையான கடனுதவியை, வங்கிகளிடமிருந்து பெற சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள மெட்ரோ ரயில்களில் ( Blue and green line) நிலையான நீலம் நிறமே பிரதானமாக உள்ளது. இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்டத்தில், Blue or green line பொறுத்து, மெட்ரோ ரயில் பெட்டிகளின் நிறத்தை மாற்றும் திட்டம் உள்ளது.
52 கி.மீ. தொலைவிலான வழித்தடத்திலான பணிகளுக்கு சிக்னலிங் மற்றும் ரயிலின் பாகங்களில் 90 சதவீதம், ஜப்பானிலிருந்தே இறக்குமதி செய்யப்பட்டுள்ளன. ஜப்பான் ஏஜென்சி மூலம் நிதியுதவி பெற்றுள்ளதால், அவர்களிடமிருந்து ரயிலின் பாகங்கள் பெறுவது கட்டாயம். ரயில்கள் பெரும்பாலும், இந்தியா மற்றும் ஜப்பானில் கட்டமைப்படுகின்றன. பெரும்பாலான மெட்ரோ ரயில்கள், ஜப்பானிலேயே கட்டமைக்கப்பட்டுள்ளன. மீதமுள்ள 66 கி.மீ. தொலைவிலான வழித்தடத்தில் இயங்க ரயில்களை வாங்க, பிரான்ஸ், ஜெர்மனி மற்றும் சீனாவில் உள்ள மெட்ரோ ரயில் தயாரிப்பு நிறுவனங்களை தொடர்பு கொள்ள திட்டமிட்டுள்ளதாக அந்த அதிகாரி கூறினார்.