சென்னையில் வரும் திங்கட்கிழமை முதல் 7 நிமிட இடைவெளியில் மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
சென்னையில் மெட்ரோ ரயில்களில் பயணிப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. இதனையடுத்து பயணிகளின் வசதிக்காக மெட்ரோ ரயில் நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பயணிகள் தங்கள் மொபைல் போன்களில் உள்ள பேடிஎம், வாட்ஸ் ஆப், போன்பே உள்ளிட்ட செயலிகள் மூலம் டிக்கெட் டிக்கெட் பெற்றுக்கொள்ளும் முறையே மெட்ரோ ரயில் நிர்வாகம் செயல்படுத்தி வருகிறது.
இந்தநிலையில், அதிகரித்து வரும் பயணிகள் எண்ணிக்கைக்கு ஏற்ப மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் கால இடைவெளியை மெட்ரோ நிர்வாகம் மேலும் குறைத்துள்ளது.
இதுகுறித்து மெட்ரோ ரயில் நிர்வாகம் தெரிவித்திருப்பதாவது; சென்னை மெட்ரோ ரயில் நிறுவனம், அதிகரித்து வரும் மெட்ரோ ரயில் பயணிகளின் எண்ணிக்கையைக் கருத்தில் கொண்டு மற்றும் அவர்களின் காத்திருப்பு நேரத்தை குறைப்பதற்காகவும் இரண்டு வழித் தடங்களிலும் நெரிசல் மிகு நேரங்கள் இல்லாத மற்ற நேரங்களில் 9 நிமிட இடைவெளியில் இயக்கப்பட்டு வரும் மெட்ரோ ரயில் சேவைகள் வரும் நவம்பர் 27 ஆம் தேதி முதல் 7 நிமிட இடைவெளியில் இயக்கப்படும். மெட்ரோ ரயில் பயணிகள் இச்சேவையை பயன்படுத்திக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“