கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கு: விசாரணை ஒத்திவைப்பு

கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது

கூட்டுறவு சங்கங்களின் தேர்தலுக்கு தடை கோரிய வழக்கின் விசாரணையை சென்னை உயர்நீதிமன்றம் நாளை தள்ளிவைத்துள்ளது.

தமிழகம் முழுவதும் 15 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், இன்று முதல் நான்கு கட்டங்களாக நடக்கிறது.

வேலூர் மாவட்டம், தக்கோலம் தொடக்க வேளாண்மை கூட்டுறவு சங்கம், நாகப்பட்டினம் மாவட்டம், வேதாரண்யம் உப்பு உற்பத்தி மற்றும் விற்பனை கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட சங்கங்கள் சார்பில், தேர்தலுக்கு தடை விதிக்க கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்குகள் தொடரப்பட்டுள்ளன.

இந்த வழக்குகள் நீதிபதி டி.ராஜா முன் விசாரணைக்கு வந்த போது, மனுதாரர் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், ஆளுங்கட்சி வேட்பாளர்களை வெற்றி பெறச் செய்வதற்காக அதிகாரிகள் முறைகேடுகளில் ஈடுபட்டுள்ளதாகவும், எதிர்க்கட்சி வேட்பாளர்களின் வேட்புமனுக்களை அற்ப காரணங்களை கூறி நிராகரித்து விடுவதாகவும் குற்றம் சாட்டி வாதிட்டார். மேலும் தேர்தல் நடத்துவது தொடர்பான விதிகள் ஏதும் பின்பற்றப்படவில்லை எனவும் வாதிட்டார்.

அரசுத்தரப்பில் ஆஜரான கூடுதல் தலைமை வழக்கறிஞர், தேர்தல் பிரச்னை தொடர்பாக பதிவாளரை தான் அணுக வேண்டும் என விதிகளில் கூறப்பட்டுள்ளது எனவும், ஏற்கனவே கூட்டுறவு சங்க தேர்தல் தொடர்பான வழக்குகளை சென்னை உயர் நீதிமன்ற தனி நீதிபதியும், மதுரை கிளையில் தலைமை நீதிபதி அமர்வும் தள்ளுபடி செய்துள்ளதாக வாதிட்டார்.

இரு தரப்பு வாதங்கள் முடிவடையாததால், வழக்கின் விசாரணையை நீதிபதி, மீண்டும் நாளை தள்ளி வைத்தார்.

×Close
×Close