கூட்டுறவு சங்க தேர்தலை வெளிப்படைத் தன்மையுடன் நடத்த வாக்காளர்கள் பட்டியல், வேட்புமனு, பரிசீலனை உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட கோரிய வழக்கில் 13 ஆம் தேதிக்கு பதில் அளிக்க கூட்டுறவு தேர்தல் ஆணையத்துக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு.
தமிழகம் முழுவதும் 15 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் நான்கு கட்டங்களாக நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி தேர்தல் நடவடிக்கைகள் தொடங்கியுள்ளன.
இந்நிலையில் இது தொடர்பாக காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரைச் சேர்ந்த அண்ணாமலை, குரம் கிராமத்தை சேர்ந்த பச்சையப்பன் ஆகியோர் சென்னை உயர் நீதிமன்றத்தில் பொதுநல மனுத்தாக்கல் செய்துள்ளனர்.
அதில் கூட்டுறவு சங்கத் தேர்தலில் முறைகேடுகள் நடப்பதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளன.
தமிழகம் முழுவதும், 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு நான்கு கட்டங்களாக தேர்தல் நடத்தப்படுகிறது. ஏற்கனவே நடந்த இரண்டு கட்ட தேர்தலில் முறைகேடுகள் நடந்துள்ளதாக சென்னை உயர் நீதிமன்றத்தில் ஏராளமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன.
இந்நிலையில், கூட்டுறவு சங்க தேர்தலை வெளிப்படைத் தன்மையுடன் நடத்தவும் உறுப்பினர்கள் பட்டியல், வாக்காளர்கள் பட்டியல், வேட்புமனு, பரிசீலனை உள்ளிட்ட விவரங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய கூட்டுறவு தேர்தல் ஆணையத்துக்கு உத்தரவிட வேண்டும் இதன் முலம் தேர்தலில் வெளிப்படை தன்மையை உருவாக்க முடியும். தேர்தலில் முறைக்கேடுகளை தடுக்க முடியும் எனவே தேர்தல் நடைமுறைகளை இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய உத்தரவிட வேண்டும் என மனுவில் கூறியிருந்தார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், சேஷசாயி ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதிகள், மனு தொடர்பாக கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையர் பதிலளிக்க உத்தரவிட்டு வழக்கின் அடுத்த விசாரணை ஏப்ரல் 13 ஆம் தேதிக்கு தள்ளிவைத்தனர்.