கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு : கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஓய்வு பெற்ற நீதிபதிகள் கே. வெங்கட்ராமன், ராஜசூரியா, இராமநாதன், எஸ்.ராஜேஷ்வரன் ஆகியோரை நியமித்து சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகம் முழுவதும் 15 துறைகளின் கட்டுப்பாட்டில் உள்ள 18 ஆயிரத்து 775 கூட்டுறவு சங்கங்களுக்கு நிர்வாகிகளை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல், ஏப்ரல் 2 முதல் நான்கு கட்டங்களாக நடைபெற்றது.
இந்நிலையில், இந்த தேர்தலில் பல்வேறு முறைகேடுகள் நடைபெற்றதாக கூறி திமுக கொறடா சக்கரபாணி மனு தாக்கல் செய்தார்.
இதே போல், சென்னை புதுப்பேட்டை கூட்டுறவு சங்கம் உள்ளிட்ட சுமார் 650 சங்கத் தேர்தலில் போட்டியிட வேட்பாளர்கள் சார்பில் தாக்கல் செய்த மனுக்களில், முறைகேடு நடைபெற்ற சங்கத்தின் தேர்தலுக்கு தடைவிதிக்க வேண்டும். முறைகேடு புகார் எழுந்த சங்கங்களை தேர்தல் முடிவுகளை வெளியிட தடை விதிக்க வேண்டும். முறைகோடு புகார் தொடர்பான அனைத்து சங்கங்களுக்கும் மறு தேர்தல் நடத்த உத்தரவிட வேண்டும் என மனுவில் தெரிவித்து இருந்தனர்.
இந்த அனைத்து வழக்குகளையும் விசாரித்த உயர்நீதிமன்றம், கடந்த 31 ஆம் தேதி தீர்ப்பளித்தனர். அதில், கூட்டுறவு சங்க தேர்தல் புகார்களை விசாரிக்க உயர் நீதிமன்றத்தின் ஒய்வு பெற நீதிபதிகள் நியமிக்கப்பட வேண்டும். மேற்கு, தெற்கு, வடக்கு, மத்திய கிழக்கு என நான்கு மண்டத்தில் தலா ஒரு நீதிபதி தலைமையில் குழு அமைக்கப்பட வேண்டும். இந்த குழுவில் ஒவ்வொரு மாவட்ட கூட்டுறவு சங்க இணை பதிவாளர், மாவட்ட ஆட்சியர் ஆகியோர் இருப்பார்கள்.
இந்த கமிட்டியை தமிழக அரசு, ஒரு வாரத்தில் அமைக்க வேண்டும். வழக்கு தொடர்ந்தவர்கள் இந்த குழுவில் புகார் அளிக்க வேண்டும். இந்த கமிட்டி குறித்து தமிழக அரசு விரிவான விளம்பரங்களை வெளியிட வேண்டும்.
ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையிலான கமிட்டியானது தேர்தல் முறைகேடுகள் தொடர்பாக புகார்களை விசாரித்து, அதன் அடிப்படையில் எந்த கூட்டுறவு சங்கத்தின் தேர்தல் முறையாக நடைப்பெறவில்லையோ அந்த சங்கங்களுக்கு மீண்டும் புதிதாக மறுதேர்தல் நடத்த வேண்டும் என உத்தரவிடலாம். அனைத்து இறுதி முடிவுகளும் எடுக்க இந்த குழுவிற்கே அதிகாரம் உள்ளது.
உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்த சங்கங்களை தவிர மற்ற சங்கத்தின் தேர்தல் முடிவுகளை வெளியிடலாம். அந்த சங்கத்தின் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்கள் பதவி ஏற்றுக் கொள்ளலாம்.
தேர்வு பெற்ற கூட்டுறவு சங்கங்களின் நிர்வாகிகள் விதிகள் படி செயல்படலாம். தேர்தலின் போது
வேட்பு மனு பெற மறுத்தது, நிராகரிப்பு தொடர்பாக தேர்தல் ஆணையத்தில் ஏற்கனவே புகார் அளித்திருந்தால் அதையும் புதிதாக அமைக்கப்பட்ட குழு விசாரிக்கலாம். ஆனால் இனி வரும் புதிய புகார் மனு மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவோ, விசாரிக்கவோ கூடாது என உத்தரவிட்ட நீதிபதிகள், மனுக்கள் தொடர்பான விரிவான உத்தரவை பின்னர் பிறப்பிப்பதாக தெரிவித்தனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் இன்று விரிவாக உத்தரவிட்ட நீதிபதிகள், கூட்டுறவு சங்க தேர்தல் முறைகேடு புகார் குறித்து விசாரணையை நடத்த, வடக்கு மண்டலத்திற்கு - ஓய்வு பெற்ற நீதிபதி இராஜேஷ்வரன் நியமிக்கப்படுவதாகவும், தெற்கு மண்டலத்திற்கு உயர்நீதிமன்ற ஓய்வு பெற்ற நீதிபதி ஆர்.எஸ்.ராமநாதன் நியமிக்கப்படுவதாகவும், மேற்கு மண்டலங்களுக்கு ஓய்வு பெற்ற நீதிபதி கே. வெங்கட்ராமன் நியமிக்கப்படுவதாகவும், மத்திய கிழக்கு மண்டலத்திற்கு ஓய்வு பெற்ற நீதிபதி எஸ். ராஜசூர்யா நியமிக்கப்படுவதாகவும் உத்தரவிட்டனர்.
இந்த குழுக்களை 2 வாரத்திற்குள் தமிழக அரசுக்கு அமைக்க வேண்டும் எனவும், குழு அமைக்கப்பட்ட 7 நாட்களுக்குள் தேர்தல் முறைகேடுகள் குறித்த புகார்கள் அளிக்கலாம் எனவும் முறைகேடு தொடர்பாக விசாரணை நடத்தி நீதிபதிகள் குழு உரிய உத்தரவு பிறப்பிக்கும் என தெரிவித்து வழக்கை முடித்துவைத்தனர்.