மின் வாரிய ஊழலைக் கண்டித்து மார்ச் 4-ம் தேதி உண்ணாவிரதம் நடத்த அறப்போர் இயக்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்துக்கு 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரி இறக்குமதி செய்ததில் 2177 கோடி ரூபாய் இழப்பு ஏற்படுத்தியது தொடர்பாக சுதந்திரமான விசாரணைக்கு உத்தரவிட அறப்போர் இயக்கம் கோரிக்கை விடுத்து வருகிறது. இதற்காக வரும் 4-ம் தேதி உண்ணாவிரதம் நடத்த அறப்போர் இயக்கத்துக்கு சென்னை உயர் நீதிமன்றம் அனுமதித்துள்ளது.
கடந்த 2012 -16ம் ஆண்டுகளுக்கு இடையில் இந்தோனேஷியாவில் இருந்து 2.44 கோடி மெட்ரிக் டன் நிலக்கரியை டான் ஜெட்கோ இறக்குமதி செய்தது. நிலக்கரிக்கு அதிக விலைப்கொடுத்ததன் மூலம் அரசுக்கு 2177 கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டது குறித்தும், தமிழகத்தில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த கோரியும் அறப்போர் இயக்கம் சார்பில் சென்னை வள்ளுவர் கோட்டத்தில் வரும் 4ம் தேதி உண்ணாவிரதப் போராட்டம் நடத்த காவல் ஆணையரிடம் அனுமதி கோரப்பட்டது.
ஆனால், நிலக்கரி ஊழல் குறித்து சி பி ஐ விசாரித்து வருவதாகவும், லோக் ஆயுக்தா அமைப்பது குறித்து அரசு நடவடிக்கை எடுத்து வருவதாகவும் கூறி உண்ணாவிரதத்துக்கு அனுமதி மறுத்து சென்னை காவல் ஆணையர் உத்தரவிட்டார்.
இந்த உத்தரவை ரத்து செய்ய கோரி அறப்போர் இயக்கம் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மனுவை விசாரித்த நீதிபதி எம்.எஸ்.ரமேஷ், 4ம் தேதி உண்ணாவிரதம் நடத்த அனுமதியளித்து உத்தரவிட்டார்.