கஜ புயலின் கோரத்தாண்டவத்தால் சாய்ந்த தென்னை மரங்களை பார்த்து வேதனையில் விவசாயி ஒருவர் தற்கொலை செய்துக் கொண்டுள்ளார். மேலும் ஒரு விவசாயி அதிர்ச்சியில் உயிரை இழந்துள்ளார்.
விவசாயி தற்கொலை:
கடந்த வாரம் ருத்ரதாண்டவம் ஆடிய கஜ புயலினால் தமிழகம் சந்தித்துள்ள இழப்புகள் எராளம். நாட்கள் கடந்தும் இன்று வரை மக்கள் அதிலிருந்து மீண்டும் வர முடியாமல் தவித்து வருகின்றனர். குறிப்பாக டெல்டா மாவட்டங்களை பொருத்தவரையில் தஞ்சை, நாகை, திருவாரூர் ஆகியவை வெள்ளகாடாகின.
ஒரு பக்கம் வீடுகள், உடைமைகளை இழந்த துயரம் என்றால், மறுபுறம் இத்தனை நாள் சோறு போட்டு வந்த தென்னை மரங்கள், பயிர்கள், வாழைகள் மண்ணோடு மண்ணாகின. இதைப் பார்த்து ஒட்டு மொத்த விவசாயிகளும் ரத்த கண்ணீர் வடித்து வருகின்றனர்.
குறிப்பாக தஞ்சை மாவட்டத்தில் பட்டுக்கோட்டை, பேராவூரணி, சேதுபாவாசத்திரம், மதுக்கூர் பகுதியில் ஏராளமான தென்னை மரங்கள் சாய்ந்து விட்டன. இந்நிலையில் கஜ புயலில் சுமார் 5 ஏக்கர் தென்னை மரங்களை இழந்த விவசாயி சுந்தர்ராஜன் விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ள சம்பவம் தஞ்சை மாவட்ட விவசாயிகளை பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.
தஞ்சை மாவட்டம் சோழகன்குடிக்காடு கிராமத்தை சேர்ந்த சுந்தர்ராஜன் தனக்கு சொந்தமான சுமார் 5 ஏக்கர் நிலத்தில் தென்னை சாகுபடி செய்திருந்தார். கஜாவின் ஆட்டத்தால் இந்த மரங்கள் அனைத்தும் தரையில் சாய்ந்தன. இதனால் மனமுடைந்த அவர், விஷம் குடித்து தற்கொலை செய்துக்கொண்டுள்ளார்.
தனது கணவரின் சடலத்தை பார்த்து தேம்பி அழுத, சுந்தர்ராஜனின் மனைவி, “என் கணவர் அவரின் பிள்ளைகள் போல தென்னை மரங்களை பார்த்துக் கொண்டார். மரங்கள் சாய்ந்ததை அவரால் ஏற்றுக் கொள்ள முடியவில்லை. இரவு முழுவதும் அதை நினைத்து நினைத்து அழுதுக்கொண்டிருந்தார்” என்று கூறியுள்ளார்.
இதே போல், தஞ்சை கீழவன்னிப்பட்டு கிராமத்தை சேர்ந்த விவசாயி சிவாஜியின் வீடு மற்றும் தென்னந்தோப்பு ஆகியவை கஜா புயலினால் சேதம் அடைந்தது. இந்த துக்கத்தை தாங்கிக் கொள்ள முடியாத அவர் அதிர்ச்சியில் மரணம் அடைந்துள்ளார். தஞ்சையில் இந்த இரண்டு விவசாயிகளின் மரணமும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இதுக்குறித்து காவல் துறையின் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.