கேரளாவைச் சேர்ந்த நகைக் கடை உரிமையாளர் இடம் இருந்து 1 கிலோ 250 கிராம் தங்கக் கட்டியுடன் மர்ம நபர்கள் தப்பிச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
ஜெய்சன் என்ற நகைக் கடையாளர், தனது கடையில் பணியாற்றும் ஊழியர் விஷ்ணுவுடன் இணைந்து, சென்னை சென்று 1.25 கிலோ தங்கக் கட்டியை வாங்கி ரயில் மூலம் இன்று காலை கோவையை வந்தடைந்தனர்.
பின்னர் கோவையில் இருந்து கார் மூலம் பாலக்காடு நோக்கி புறப்பட்டனர். இந்நிலையில், க.க.சாவடி அருகே உள்ள பெட்ரோல் பங்க் அருகே அவர்கள் வந்த போது, ஒரு கும்பல் லாரியை குறுக்கே நிறுத்தி, அவர்கள் வந்த காரை மறித்தது.
தொடர்ந்து மர்ம நபர்கள் கார் கண்ணாடியை உடைத்து அதில் நுழைந்து, காரை ஒரு சிறிய தூரம் ஓட்டிச் சென்று உள்ளனர். பின்னர், ஜெய்சன் மற்றும் விஷ்ணுவை காரில் இருந்து கீழிறக்கி விட்டு, தங்கக்கட்டியுடன் காரையும் எடுத்துக் கொண்டு மர்மமாக தப்பிச் சென்று உள்ளனர்.
இது தொடர்பாக க.க.சாவடி போலீசார் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.