/indian-express-tamil/media/media_files/2025/08/20/covai-bus-accident-2025-08-20-12-57-49.jpg)
கோவையில் தனியார் நகரப் பேருந்து மற்றும் மினி பேருந்து ஒன்று மோதிக்கொண்டதன் சி.சி.டி.வி காட்சிகள் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேரத்தைக் கடைப்பிடிப்பதில் ஏற்பட்ட தகராறு காரணமாக இரண்டு பேருந்துகளின் ஊழியர்களுக்கும் இடையே ஏற்பட்ட வாக்குவாதம், மோதல் வரை சென்றது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு கேள்விக்குறியாகியுள்ளது.
புதிதாக விரிவுபடுத்தப்பட்ட மினி பேருந்து சேவை, போக்குவரத்து வசதி இல்லாத பகுதிகளுக்கும் சென்றடைய வேண்டும் என்ற நோக்கத்தில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டத்தின் கீழ், மினி பேருந்துகள் 25 கி.மீ. வரை இயக்க அனுமதிக்கப்படுகின்றன. மேலும், அவை பேருந்து நிலையங்களில் இருந்து பயணத்தைத் தொடங்கவும் அனுமதிக்கப்பட்டுள்ளன.
இந்தத் திட்டத்தின் கீழ், காந்திபுரம் நகரப் பேருந்து நிலையத்தில் இருந்து மருதமலைக்கு ஸ்ரீராம் என்ற மினி பேருந்து மற்றும் கலைமகள் என்ற தனியார் பேருந்து இயக்கப்பட்டு வருகின்றன. இந்த இரு பேருந்துகளின் ஊழியர்களுக்கும் இடையே கடந்த வெள்ளிக்கிழமை மாலை வாக்குவாதம் ஏற்பட்டது. மாலை 6.15 முதல் 6.25 வரை, கலைமகள் தனியார் பேருந்து நீண்ட நேரம் பயணிகளை ஏற்றியதாக ஸ்ரீராம் மினி பேருந்தின் நடத்துனர் சூர்யா கேள்வி எழுப்பியுள்ளார்.
இந்த வாக்குவாதம் முற்றிய நிலையில், கலைமகள் பேருந்தின் ஓட்டுநர் பேருந்தை வேகமாகப் பின்னோக்கி இயக்கி, ஸ்ரீராம் மினி பேருந்தின் மீது மோதியுள்ளார். இந்த மோதல் காட்சி சி.சி.டி.வி.யில் பதிவாகியுள்ளது. இந்தச் சம்பவம் குறித்து ஸ்ரீராம் மினி பேருந்தின் நடத்துனர் சூர்யா, காந்திபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். கலைமகள் பேருந்தின் உரிமையாளர், ஓட்டுநர் மற்றும் நடத்துனர் ஆகியோர் தன்னைத் தாக்கி காயப்படுத்தியதாகவும், கொலை முயற்சி செய்ததாகவும், தகாத வார்த்தைகளால் திட்டி, சாதிப் பெயரைச் சொல்லித் தாக்கியதாகவும் தனது புகாரில் அவர் குறிப்பிட்டுள்ளார். சி.சி.டி.வி. காட்சிகள் இந்த மோதலுக்கு முக்கிய ஆதாரமாகப் பார்க்கப்படுகின்றன.
உரிய நேரத்திற்கு இயக்குவதில் பிரச்சனை; பேருந்துகளை கொண்டு மோதிக் கொள்ளும் சி.சி.டி.வி காட்சிகள் #coimbatore#CCTVpic.twitter.com/LpEZAJ3s6w
— Indian Express Tamil (@IeTamil) August 20, 2025
இதுபோன்ற பொறுப்பற்ற ஓட்டுநர்களால், பேருந்துகளில் பயணிக்கும் பொதுமக்களின் பாதுகாப்பு குறித்துப் பெரும் அச்சம் எழுந்துள்ளது. உரிய விசாரணை நடத்தி, தவறிழைத்தவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைத்துப் பயணிகளின் கோரிக்கையாக உள்ளது. இதுபோன்ற சம்பவங்கள் மீண்டும் நடக்காமல் இருக்கவும், பொதுமக்களின் பயணம் பாதுகாப்பாக இருப்பதை உறுதி செய்யவும் அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.