பி.ரஹ்மான் கோவை மாவட்டம்
கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெறவுள்ள மாபெரும் தனியார் துறை வேலைவாய்ப்பு முகாமினை முன்னிட்டு முதல்நிலை கலந்தாய்வுக் கூட்டம் மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில் மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத் துறை அமைச்சர் செந்தில் பாலாஜி முன்னிலையிலும், தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன் தலைமையிலும் இன்று நடைபெற்றது. இக்கூட்டத்தில் மாவட்ட ஆட்சியர் சமீரன், மாநகராட்சி ஆணையர் பிரதாப் மற்றும் மாவட்ட அதிகாரிகள் பங்கேற்றனர்.
இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த தொழிலாளர் மற்றும் திறன் மேம்பாட்டு துறை அமைச்சர் சி.வி கணேசன், "முதல்வரின் உத்தரவுபடி இதுவரை 67 இடங்களில் வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்பட்டு, ஒரு லட்சத்து ஏழாயிரம் இளைஞர்கள் தனியார் தொழில் நிறுவனங்களில் வேலை வாய்ப்பு பெற்றுள்ளனர். வரும் 27 ஆம் தேதி பொள்ளாச்சியில் மாபெரும் தனியார் வேலை வாய்ப்பு முகாம் நடைபெறுகிறது.
தமிழ்நாட்டில் வேலை இல்லை என்ற சொல்லை போக்க தமிழக முதல்வரால் 'நான் முதல்வன்' திட்டம் உட்பட பல்வேறு திட்டங்கள் அமல்படுத்தப்பட்டு வருகிறது. வரும் 5 ஆண்டுகளில் 5 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பை பெற்றுத் தருவோம் என்ற இலக்கை முன்வைத்துள்ளோம்.
இந்திய அளவில் தமிழகத்தின் உயர் கல்வி பயிலும் சதவீதம் 51% ஆக உள்ளது. தமிழ்நாட்டை முதன்மை மாநிலமாக ஆக்க செயல்பட்டு வருகிறோம். இந்தாண்டு மட்டுமே ரூ.2800 கோடி நிதி வழங்கப்பட்டு உலகத்தரத்தில் தொழில் பயிற்சி மையங்களை மேம்படுத்தும் பணிகள் நடைபெற்று வருகிறது" என்றார்.
தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் செந்தில் பாலாஜி, "மழையால் மக்களுக்கு பாதிப்பு வர கூடாது என்பதற்கு பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. கோவை மாநகராட்சியில் மழையால் கடந்த ஆண்டு பல இடங்களில் நீர் தேங்கியது. கடந்த ஆண்டின் பாதிப்பை ஆய்வு செய்து இந்த ஆண்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
32 வாய்கால்களில் சீரமைப்பு பணிகள் முடிக்கப்பட்டு, மழை நீர் பாதிப்புகள் ஏற்படாதபடி முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் அதிக மழை பொழிந்தாலும் சீரமைப்பு பணிகளை மேற்கொள்ள மாவட்டம் மற்றும் மாநகராட்சி நிர்வாகம் தயார் நிலையில் உள்ளது.
தமிழகம் முழுவதும் சீராண மின் விநியோகம் வழங்கப்பட்டு வருகிறது. 11 ஆயிரம் பேர் மின் வாரியத்தில் மழைக்காலங்களில் சிறப்பு பணியாற்ற நியமிக்கப்பட்டுள்ளனர். மாவட்ட ஆட்சியர் தலைமையில் இக்குழுக்கள் செயல்பட்டு வருகிறது.
சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில் நடத்த இந்தியாவிலேயே தமிழகத்தில் தான் மிக குறைந்த மின்கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. நிதிநிலைக்கு ஏற்ப அவர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும். மாநகராட்சி மற்றும் நெடுஞ்சாலை துறை சாலைகளை சீரமைக்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
கோவையில் கடந்த ஐந்து ஆண்டில் எந்தவிதமான சாலையும் போடவில்லை. இதற்கான சிறப்பு நிதி ரூ.200 கோடியில், 26 கோடி விடுவிக்கப்பட்டு கோவை மாநகராட்சியில் சாலைகள் சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. மார்ச் மாதத்திற்குள் பழுதடைந்த சாலைகள் சரி செய்யப்படும்' என தெரிவித்தார்.
மேலும், கோவை மாநகர பகுதியில் மழை நீர் தேங்கியுள்ள இடங்களில் நீர் வெளியேற்றும் பணிகளை அமைச்சர் செந்தில் பாலாஜி நேரில் பார்வையிட்டார்.
தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்துசெய்திகளையும்உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெறhttps://t.me/ietamil
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.