கோவை, அண்ணா சிலை அருகே உள்ள நட்சத்திர ஹோட்டலில் இந்திய ஜவுளித்துறை கூட்டமைப்பு (Confederation of Indian Textile Industry - CITI) சார்பில் மூன்றாவது செயற்கை இழை கருத்தரங்கு துவக்க நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இந்திய ஜவுளித் துறையின் எதிர்காலப் பயணத்தில் செயற்கை இழைகளின் முக்கியத்துவத்தை உணர்த்தும் ஒரு வரலாற்று நிகழ்வாக இது அமைந்தது.
இந்த கருத்தரங்கை மத்திய ஜவுளித் தொழில் துறை இணை அமைச்சர் பபித்ரா மார்கரிட்டா சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டு துவக்கி வைத்தார். இதில் கோவை, திருப்பூர், ஈரோடு உள்ளிட்ட தமிழகத்தின் பல மாவட்டங்களிலிருந்தும், பிற மாநிலங்களிலிருந்தும் ஜவுளித் தொழில் துறையினர் ஆர்வத்துடன் கலந்து கொண்டனர்.
நிகழ்வில் சிறப்புரையாற்றிய அமைச்சர், ஜவுளித் தொழில்துறையில் கோவை மற்றும் திருப்பூர் ஆகிய பகுதிகள் தேசிய அளவில் மிகச் சிறப்பாகச் செயல்பட்டு வருவதைப் பாராட்டினார். ஜவுளித்துறை மேம்பாட்டிற்காக மத்திய அமைச்சகம் பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகளை எடுத்து வருவதாகவும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, "உற்பத்தி சார்ந்த ஊக்குவிப்புத் திட்டம் (Production Linked Incentive - PLI)" சர்வதேச அளவில் இந்திய ஜவுளித் துறையினர் போட்டியிடுவதற்கு உறுதுணையாக இருந்து வருவதாக அமைச்சர் தெரிவித்தார். இத்திட்டத்திற்காக ஜவுளித் துறையின் பட்ஜெட்டில் 22 சதவீதம் ஒதுக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக் காட்டினார்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/06/30/whatsapp-image-2025-2025-06-30-14-45-24.jpeg)
மேலும், ஜவுளித் துறையின் தொழில்நுட்ப உள்கட்டமைப்புகளை மேம்படுத்தும் விதமாக "பி எம் மித்ரா பார்க் (PM MITRA Park)" உருவாக்கப்பட்டுள்ளதாகவும், சர்வதேச அளவில் செயற்கை இழை சந்தையில் இந்தியாவின் உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக இத்திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் விளக்கினார். பல்வேறு நாடுகளுக்கு இந்தியாவிலிருந்து செயற்கை இழைத் தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்படுவதையும், கடந்த நிதியாண்டில் இந்தியாவின் செயற்கை இழைத் தயாரிப்புகளின் ஏற்றுமதி 6 பில்லியன் டாலர் அளவிற்கு உயர்ந்துள்ளதையும் அமைச்சர் பெருமையுடன் குறிப்பிட்டார். சர்வதேச சந்தைக்கு உகந்த சூழல் இந்தியாவில் உருவாக்கப்பட்டுள்ளதாகவும் அவர் உறுதிபடத் தெரிவித்தார்.
இந்நிகழ்வினை அடுத்து, தேசிய பஞ்சாலை கழக தொழிற்சாலைகளை (National Textile Corporation - NTC) மீண்டும் திறக்க வலியுறுத்தி சிஐடியு (CITU) உள்ளிட்ட தொழிற்சங்கத்தினர் அமைச்சரிடம் மனுக்களை அளித்தனர்.
இதனை அடுத்து செய்தியாளர்களுக்குப் பேட்டி அளித்த மத்திய இணை அமைச்சர், NTC தொழிலாளர்கள் பிரச்சனை குறித்து விரைவில் தீர்வு காணப்படும் என உறுதியளித்தார். தொழிலாளர்களுக்குச் சம்பளம் மட்டுமின்றி பல்வேறு பிரச்சனைகள் இருப்பதாகவும், இது தொடர்பாக ஆலோசனைக் கூட்டம் நடத்தி அதற்கான தீர்வு காண்பதற்கான வழிவகைகளைச் செய்வோம் எனவும் அவர் தெரிவித்தார்.
தமிழ்நாட்டில் ஜவுளித்துறை மிகச் சிறப்பாக இயங்கி வருகிறது எனத் தெரிவித்த அவர், திருப்பூர் மாவட்டம் ஜவுளித்துறைக்கான ஒளிமயமான எதிர்காலத்தைக் கொண்டுள்ளது எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.