கோவை மாநகராட்சியின் சாதாரண கூட்டம் இன்றைய தினம், மேயர் ரங்கநாயகி தலைமையில் மாநகராட்சி கூட்ட அரங்கில் நடைபெற்றது. இக்கூட்டத்திற்கு வந்திருந்த அதிமுக கவுன்சிலர்கள் ஷர்மிளா, பிரபாகரன் மற்றும் ரமேஷ் ஆகியோர் தலையில் முக்காடு போட்டபடி கூட்டத்தில் கலந்து கொண்டனர்.
குறிப்பாக, மாநகராட்சியில் சொத்துவரி 6 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தலையில் முக்காடு போட்டபடி கூட்டத்தில் கலந்து கொண்டதாகவும், சொத்து வரி உயர்வினை உடனடியாக திரும்பப் பெற வேண்டுமெனவும் அதிமுக கவுன்சிலர்கள் சார்பில் வலியுறுத்தப்பட்டது.
இதைத் தொடர்ந்து, கூட்டம் தொடங்கியவுடன், காங்கிரஸ் , சி.பி.ஐ, சி.பி.எம் உள்ளிட்ட கவுன்சிலர்களும் எதிர்ப்பு தெரிவித்து வாக்குவாதத்தில் ஈடுபட்டனர். அதன்பேரில், வாக்குவாதத்தில் ஈடுபட்டவர்களுடன் மேயர் ரங்கநாயகி பேச்சுவார்த்தை நடத்தினார். அரசிடம் பேசி இது குறித்து முடிவு எடுக்கப்படுமென மேயர் கூறியதை ஏற்க மறுத்த கவுன்சிலர்கள் தொடர் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
இதேபோல், மாநகராட்சி மின் மயானத்தை ஈஷா யோகா மையம் பராமரித்து நிலையில், அவர்கள் மீது பல குற்றச்சாட்டுகள் இருப்பதால், அவர்களுக்கு வழங்கப்பட்ட ஒப்பந்தத்தை நீட்டிக்க கூடாது என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கவுன்சிலர் ராமமூர்த்தி தெரிவித்தார். இது தொடர்பான தீர்மானம் அடுத்த மாதம் எடுத்துக் கொள்ளப்படுமென மேயர் தெரிவித்தார். தொடர் வாக்குவாதங்களால் கூட்டத்தில் சலசலப்பு ஏற்பட்டது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“