சீனியர்களை ஓரம் கட்டும் சோனாலி பிரதீப்? கோவை அ.தி.மு.க சர்ச்சை

சோனாலி பிரதீப் அதிமுகவில் கோவை மேயர் பதவிக்கு முயற்சிக்கிறார், சீனியர்களை ஓரம்கட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்ற கோவை அதிமுகவில் எழுந்துள்ள சர்ச்சையை கட்சித் தலைமை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோவை அதிமுக சீனியர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

Coimbatore AIADMK controversy, aiadmk party seniors questions Sonali Pradeep, overtake seniors - கோவை அதிமுக, கோவை, அதிமுக, அதிமுக சீனியர்களை ஓரம் கட்டும் சோனாலி பிரதீப், சோனாலி பிரதிப், எஸ்பி வேலுமணி, Sonali Pradeep, AIADMK, kovai, SP Velumani

கோவை அதிமுகவில் சீனியர்களை ஓரம் கட்டிவிட்டு அமைச்சர் பங்கேற்கும் அதிமுக நிகழ்ச்சிகளில் மேடைகளில் அமரும் சோனாலி பிரதீப்பை அதிமுக சீனியர்கள் பலரும் விமர்சித்து வருகின்றனர். 30 வருடமாக கட்சியில் இருக்கிறோம், சீனியர்கள் எல்லோரும் கீழே அமர்திருக்கும்போது, அவர் சமீபத்தில் கட்சிக்கு வந்துவிட்டு மேடைகளில் ஏறி அமர்கிறார், இதை கேட்க வேண்டும் என்று அதிமுக சீனியர்கள் பலரும் விமர்சிக்கின்றனர்.

இதனால், சோனாலி பிரதீப் கோவை அதிமுகவில் சீனியர்களை ஓரம் கட்டிவிட்டு அமைச்சர் எஸ்.பி வேலுமணி பெயரைச் சொல்லி அதிமுக நிகழ்ச்சிகளில் மேடைகளில் அமர்ந்து கவனத்தைப் பெறுகிறார் என்று கூறுகிறார்கள். கோவை அதிமுஅவில் சர்சையை ஏற்படுத்தியுள்ள சோனாலி பிரதீப் யார் என்றால், அழகி போட்டிகளில் கலந்துகொண்டு பட்டம் பெற்றவர். சமூக ஆர்வலர், கல்வியாளர் என்று தன்னை அறிமுகப்படுத்திக் கொள்கிறார்.

கோவை வடக்கு மாவட்ட இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறையின் இணை செயலாளராக உள்ள சோனாலி பிரதீப்பின் பூர்வீகம் குஜராத். ஆனால், இவர்களின் குடும்பம் அவருடைய தாத்தா காலத்திலேயே தமிழ்நாட்டுக்கு குடிவந்துவிட்டனர். கோவை, கவுண்டம்பாளையத்தைச் சேர்ந்த சோனாலி பிரதீப்பின் கணவர் பிரதீப் ஜோஸ். மலையாள சினிமாத் தயாரிப்பாளர். சோனாலி பிரதீப்புக்கு 2 குழந்தைகள் உள்ளனர். ஆரம்பத்தில் மார்க்கெட்டிங் மேனேஜர், சேல்ஸ் எக்ஸிகியூட்டிவ் என கார்ப்பரேட் நிறுவனங்களில் பணிபுரிந்திருக்கிறார்.

திருமணத்திற்கு பிறகு, சோனாலி பிரதீப் அழகிப் போட்டிகளில் பங்கேற்று 2019ம் ஆண்டு மிஸஸ் இந்தியா யுனிவர்ஸ், மிஸஸ் யுனிவர்ஸ் பியூட்டி பர்பஸ், மிஸஸ் இந்திய தமிழ்நாடு – 2017 உள்ளிட்ட பட்டங்களைப் பெற்றுள்ளார்.

அதிமுகவில் இணைந்த சோனாலி பிரதீப், 2019ம் ஆண்டு கோயம்புத்தூர் மாநகராட்சி மேயர் பதவிக்கு அதிமுகவில் விருப்ப மனு அளித்து கவனத்தைப் பெற்றார். கோவை அதிமுக நிகழ்ச்சிகளில் தவறாமல் கலந்துகொள்ளும் சோனாலி பிரதீப் தற்போது கோவை அதிமுக சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு கோவை மேயர் பதவிக்கு முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணியின் உதவியுடன் முயற்சிப்பதாக அதிமுகளிர் அணி சீனியர் நிர்வாகிகள் கூறுகின்றனர்.

கோவை அதிமுக சீனியர்கள் கோபமடையும் விதமாக அண்மையில் நடைபெற்ற கோவை அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில் தான் சர்ச்சை நடந்துள்ளது. அதிமுக செயல்வீரர்கள் கூட்டத்தில், முக்கிய நிர்வாகிகளுக்கு மட்டுமே மேடையில் இடம் என்று கூறிவிட்டனர். ஆனால், கோவை வடக்கு மாவட்ட இளைஞர் இளம்பெண் பாசறை இணை செயலாளர் சோனாலி பிரதீப், கையில் ஒரு பார்சலுடன் இருந்தார். முன்னாள் அமைச்சர் எஸ்.பி. வேலுமணி சோனாலி மேடையில் ஏறி அமர்ந்துவிட்டார். இதனால், அதிமுக மகளிரணியின் சீனியர் நிர்வாகிகள், 30 ஆண்டுகள் கட்சிப் பணி செய்த சீனியர் நிர்வாகிகள், மாநில பொறுப்பாளர்கள் எல்லாம் மேடைக்கு கீழே அமர்ந்திருக்கும்போது இவர் மட்டும் எப்படி மேடையில் அமரலாம் என்று சோனாலி பிரதீப்பை கடுமையாக விமர்சித்தனர். பணம் இருந்துவிட்டால், கட்சிப் பணி செய்யாமல் நேரடியாக சீனியர்களைத் தாண்டி வந்துவிடலாமா என்று அதிமுக நிர்வாகிகள் கூறுகின்றனர்.

சோனாலி இப்படி திட்டமிட்டு கவனம் பெற முயற்சிக்கிறார் என்று சொன்னபோது‘எதுவாக இருந்தாலும், மாவட்ட செயலாளர், எம்எல்ஏ கிட்ட கேட்டு பண்ணுங்க.’ என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணி சோனாலி பிரதீப்பிடம் சொல்லிவிட்டார். ஆனாலும், இப்படியே தொடர்கிறது. இதுபற்றி மூத்த நிர்வாகிகளிடம் பேசினால், முன்னாள் அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் பேசுங்கள் என்று கூறுகிறார்கள். நேற்று நடந்த நிகழ்ச்சியில்கூட மூத்த நிர்வாகிகள் பலர் சொல்லியும் அவர் மேடையில் இருந்து இறங்கவில்லை. சோனாலி தான் நிகழ்ச்சிக்கு வந்திருப்பதை அமைச்சர் எஸ்.பி வேலுமணியிடம் பதிவு செய்வதற்காகவே இவர் திட்டமிட்டு இப்படி செயல்பட்டு வருகிறார் என்று கோவை அதிமுக சீனியர் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர்.

ஆனாலும், சோனாலி பிரதீப் வருகிற நகரப்புற உள்ளாட்சி தேர்தலில் அதிமுக சார்பில் கோவை மேயர் வேட்பாளராக முயற்சி செய்து வருவதாக அதிமுக சீனியர் நிர்வாகிகள் தெரிவிக்கின்றனர். சோனாலி முதலில் எங்களைப் போல, கட்சிக்காக ஆர்ப்பாட்டம், கைது, கட்சி வளர்ச்சி என கட்சிப் பணிகளில் ஈடுபடட்டும். அதைவிட்டுவிட்டு பணம் இருக்கிறது என்பதற்காக சீனியர்களை ஓரம்கட்டிவிட்டு, நேரடியாக மேடை ஏறி போட்டோவுக்கு போஸ் கொடுப்பது, பூங்கொத்து கொடுப்பது, ஸ்வீட் கொடுப்பது எல்லாம் ஏற்றுக் கொள்ள முடியாது.” என்று அதிமுக சீனியர் நிர்வாகிகள் சீறுகின்றனர்.

கோவை அதிமுகவில் சோனாலி பிரதீப் சீனியர்களை ஓரம்கட்டுவதாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து சோனாலி ஊடகங்களின் கேள்விக்கு பதிலளிக்கையில்,
“அப்படி எல்லாம் எதுவும் கிடையாது. நான் நேற்று மேடைக்கு கீழேதான் அமரச் சென்றேன். ஆனால், கீழே இடமில்லை. சீட் பார்த்துக் கொண்டிருந்தபோது, என் அப்பாவுடன் பல ஆண்டுகளாக இருந்த ஒரு அண்ணன் என்னை மேடையில் ஏற்றி அமர வைத்துவிட்டார். இதற்கு முந்தைய நிகழ்ச்சியிலும் அவர்தான் மேடையில் அமர வைத்தார். அவர்கள் சொல்வது போல பணத்தை வைத்து எல்லாம் எதுவும் செய்வதில்லை. கடவுள் எங்கள் தேவைக்கு பணம் கொடுத்திருக்கிறார்.” என்று கூறினார்.

எப்படி இருந்தாலும், சோனாலி பிரதீப் அதிமுகவில் கோவை மேயர் பதவிக்கு முயற்சிக்கிறார், சீனியர்களை ஓரம்கட்டும் முயற்சியில் ஈடுபடுகிறார் என்ற கோவை அதிமுகவில் எழுந்துள்ள சர்ச்சையை கட்சித் தலைமை உடனடியாக சரி செய்ய வேண்டும் என்று கோவை அதிமுக சீனியர் நிர்வாகிகள் தெரிவித்தனர்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“

Get the latest Tamil news and Tamilnadu news here. You can also read all the Tamilnadu news by following us on Twitter, Facebook and Telegram.

Web Title: Coimbatore aiadmk controversy party seniors questions sonali pradeep overtake seniors

The moderation of comments is automated and not cleared manually by tamil.indianexpress.com
Best of Express