காங்கிரஸ் தேசிய குழு நிர்வாகி வேணுகோபால் கேரளாவில் நிகழ்ச்சி ஒன்றில் பங்கேற்ற பின்னர், கோவை விமான நிலையம் வந்தார். டெல்லி செல்வதற்காக வந்த அவரை கோவை காங்கிரஸ் நிர்வாகிகள் சந்திக்க சென்றனர். மயூரா ஜெயக்குமார் தலைமையில் ஒரு குழுவும், செல்வம் தலைமையில் ஒரு குழுவும் வேணுகோபாலை வழியனுப்ப விமான நிலையம் வந்தனர்.
காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலிடம், இரு தரப்பினரும் மாறி மாறி குற்றம் சாட்டியதாக கூறப்படுகிறது. அப்போது இரு தரப்பினரிடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. விமான நிலையத்திற்கு வெளியே வந்த போது மயூரா ஜெயக்குமாருக்கும், செல்வத்திற்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் வார்த்தை போர் உச்சத்திற்கு செல்லும்போது முகம் சுழிக்கும் வார்த்தைகளை பயன்படுத்தி வசைப்பாடி இருக்கின்றனர் .
அந்த வீடியோ தற்பொழுது வாட்ஸ் அப்பில் வைரலாகி வருகின்றது. இதனால் கோவை விமான நிலையத்தில் பரபரப்பு ஏற்பட்டது. காங்கிரஸ் கட்சியின் மாநில மாவட்ட நிர்வாகிகளையும், பெண்களையும் தகாத வார்த்தைகளில் பேசியதாகவும், கொலை மிரட்டல் விடுத்ததாகவும் மயூரா ஜெயக்குமார் மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ், INTUC மாநில பொதுச் செயலாளர் கோவை செல்வன் உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர், அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி செயலாளரும் தமிழக காங்கிரஸ் கமிட்டி செயல் தலைவருவமான மயூரா ஜெயக்குமார் மீது கோவை மாநகர காவல் ஆணையரிடம் புகார் அளித்துள்ளனர்.
இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய காங்கிரஸ் கமிட்டி மாநில பொதுச் செயலாளர் செல்வராஜ் கூறியதாவது, காங்கிரஸ் கட்சியில் கடந்த நான்கு ஆண்டுகளாக மயூரா ஜெயக்குமார் பிரச்சனை செய்து வருவதாகவும் இதனால் பெரும்பாலான காங்கிரஸ் கட்சியினர் ஒதுங்கி இருக்க வேண்டிய சூழல் ஏற்பட்டு இருப்பதாகவும் கூறினார்.
மேலும் மயூரா ஜெயக்குமார் எல்லோரையும் ஒதுக்கி வைத்து சர்வாதிகாரத்தனமாக கட்சியை நடத்துகிறார். கடந்த மாதம் காங்கிரஸ் கட்சியினர் கூட்டம் கூட்டி தீர்மானம் நிறைவேற்றி அகில இந்திய தலைமைக்கும் மாநில தலைமைக்கும் அனுப்பி வைத்தோம்.
இத்தகைய சூழலில், கோவை விமான நிலையம் வந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொதுச் செயலாளர் வேணுகோபாலிடம், கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியில் உள்ள பிரச்சனையை கூறி அதற்கு சுமூகத் தீர்வுகாணும் படி வேண்டுகோள் விடுத்ததாக கூறினார்.
பின்னர் கோவை விமான நிலையத்திலிருந்து வெளியே வரும் போது, INTUC மாநில பொதுச் செயலாளர் கோவை செல்வனை மயூரா ஜெயக்குமார் இடித்து தள்ளியதாகவும் இதுகுறித்து கோவை செல்வன் கேள்வி எழுப்பிய நிலையில், மயூரா ஜெயக்குமார் கடுமையான வார்த்தைகளால் திட்டியதாகவும் மேலும் தன்னிடம் துப்பாக்கி இருக்கிறது ஞாபகம் வைத்துக் கொள்ளுங்கள் என்று அச்சுறுத்தியதாகவும் கூறப்படுகிறது.
மயூரா ஜெயக்குமாரால் உயிருக்கு பாதிப்பு ஏற்படுமோ என்று காங்கிரஸ் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் பயப்படுவதாக கூறிய அவர், எனவே மயூரா ஜெயக்குமாருக்கு அளிக்கப்பட்டுள்ள துப்பாக்கி உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்றும் கோவை செல்வனையும் அவரது குடும்பத்தினரையும் மிகவும் கேவலமான வார்த்தைகளால் திட்டி பொதுவெளியில் அசிங்கப்படுத்திய மயூரா ஜெயக்குமார் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் அளித்துள்ளதாகவும் கோவை செல்வன் கூறினார்.
செய்தி: பி. ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.