கோவை விமான நிலையத்தில் ஷார்ஜாவில் இருந்து கடத்தி வரப்பட்ட ரூ.1 கோடி மதிப்பிலான தங்கத்தை சுங்கத்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
கோவை விமான நிலையத்தில் இருந்து ஷார்ஜாவுக்கு வாரத்தில் ஐந்து நாட்கள் விமான சேவை வழங்கப்படுகிறது. காலை 3.45 மணியளவில் கோவை வரும் விமானம் மீண்டும் அதிகாலை 4.30 மணியளவில் ஷார்ஜாவுக்கு புறப்பட்டு செல்லும்.
இந்நிலையில், சார்ஜாவில் இருந்து கோவை வந்த ஏர் அரேபியா விமானத்தில் தங்கம் கடத்தி வருவதாக சுங்கத்துறை அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் அந்த விமானத்தில் வந்த பயணிகளிடம் சுங்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இதில் தங்கம் ஏதும் பிடிபடாத நிலையில், விமானத்தில் அதிகாரிகள் சோதனை நடத்தினர்.
அப்போது விமான இருக்கை ஒன்றின் பக்கவாட்டில் இருக்கும் உட்பக்க பேனலில் மூன்று பாக்கெட்டுகளில், 1399 கிராம் 24 காரட் சுத்தமான தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது தெரிய வந்தது. இதன் மதிப்பு 1.02 கோடி ஆகும்.
பயணிகள் யாரும் அதற்கு உரிமை கோராததால் இதுகுறித்து தொடர் விசாரணை நடைபெற்று வருகிறது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“