கோவை விமான நிலையத்தில் ரூ.7 கோடி மதிப்பிலான ஹைட்ரோபோனிக் கஞ்சா பறிமுதல் செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
நேற்று இரவு, கோவை சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரில் இருந்து வந்த ஸ்கூட் (Scoot) விமானத்தில், கோடிக்கணக்கான ரூபாய் மதிப்புள்ள உயர் ரக போதைப்பொருட்கள் கடத்தி வரப்படுவதாக வான் நுண்ணறிவு அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
உடனடியாக, விமான நிலைய வான் நுண்ணறிவுப் பிரிவு மற்றும் சுங்க இலாகா அதிகாரிகள் தீவிர சோதனையில் ஈடுபட்டனர். விமானம் தரையிறங்கியதும், அனைத்துப் பயணிகளும் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். அப்போது, கேரள மாநிலம் கோட்டயத்தைச் சேர்ந்த பகத்மான் முஜீப் மற்றும் சுகைல் உபயதுல்லா ஆகிய இருவரும் கொண்டு வந்த பைகளில் அதிகாரிகள் சோதனை செய்தபோது, அதிர்ச்சியூட்டும் வகையில் 6.713 கிலோகிராம் எடை கொண்ட உயர் ரக ஹைட்ரோபோனிக் கஞ்சா போதைப்பொருள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது.
உடனடியாக, இருவரையும் கைது செய்த அதிகாரிகள், கடத்தி வரப்பட்ட போதைப்பொருளையும் பறிமுதல் செய்தனர். இந்த ஹைட்ரோபோனிக் கஞ்சாவின் மதிப்பு சுமார் ₹7 கோடி என்று கூறப்படுகிறது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிபதியின் உத்தரவின் பேரில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/12/whatsapp-image-2025-08-12-09-51-53.jpeg)
ஒரே விமானத்தில் இரண்டு கடத்தல் சம்பவங்கள்!
இந்த அதிர்ச்சியில் இருந்து மீள்வதற்குள், அதே விமானத்தில் வந்த புதுக்கோட்டையைச் சேர்ந்த தமிழரசி ஜெயமாணிக்கம் மற்றும் பாண்டித்துரை சுப்பையா ஆகிய இரு பயணிகள், ₹18.67 லட்சம் மதிப்புள்ள எலெக்ட்ரானிக்ஸ் பொருட்களை வரி செலுத்தாமல் கடத்தி வந்ததும் தெரியவந்தது. சுங்க இலாகா அதிகாரிகள் அவர்களைப் பிடித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
/filters:format(webp)/indian-express-tamil/media/media_files/2025/08/12/whatsapp-image-2025-2025-08-12-09-52-12.jpeg)
ஒரே இரவில் அடுத்தடுத்து நடந்த இந்த இரண்டு கடத்தல் சம்பவங்கள், கோவை விமான நிலையத்தில் பெரும் பதற்றத்தை ஏற்படுத்தின. இதைத் தொடர்ந்து, விமான நிலைய அதிகாரிகள், அனைத்து விமான பயணிகளையும் தீவிர சோதனைக்கு உட்படுத்திய பின்னரே பயணிக்க அனுமதித்தனர். வெளிநாடுகளில் இருந்து வரும் பயணிகளுக்கும் கடுமையான சோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.