கோவை மாவட்டம் அன்னூர் பகுதி சுற்று வட்டாரத்தில் கிராமங்கள் உள்ளன. இங்குள்ள மக்களுக்கு உடல் நலக்குறைவு ஏற்பட்டால் அன்னூரில் உள்ள அரசு மருத்துவமனைக்கு சென்று சிகிச்சை பெறுவர். இந்நிலையில் அன்னூர் அரசு மருத்துவமனை முகப்பு பகுதியில் இங்கு இலவசமாக கருக்கலைப்பு செய்யப்படும், அது குறித்து ரகசியம் காக்கப்படும் என்ற அறிவிப்பு பலகை வைக்கப்பட்டுள்ளது. இது மருத்துவமனைக்கு வரும் பொதுமக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
சட்டவிரோதமாக கருக்கலைப்பு செய்தல் குற்றமாகும். சட்டவிரோத கருக்கலைப்பு தடை செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், மருத்துவமனையின் அறிவிப்பு பலகையால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

தமிழகத்தில் மருத்துவர்களின் அறிவுறுத்தலின்படி உரிய காரணங்கள் இருந்தால் கருக்கலைப்பு செய்யப்படும். இதே போல திருமணத்திற்கு முன்பு சூழ்நிலை காரணமாக கருவுற்ற பெண்களுக்கு அவரது பெற்றோர் உறுதிமொழியின் படி சட்டப் பூர்வமாக கருக்கலைப்பு செய்யப்படுகின்றன.
உயிருக்கு ஆபத்தான இந்த சிகிச்சையை சிலர் சட்டவிரோதமாக செய்வதால், உயிரிழப்புகள் ஏற்படுகின்றன. மேலும், கருவில் உள்ள குழந்தை பெண் குழந்தை என்றால் கருக்கலைப்பு செய்யப்படுகிறது. கருவில் உள்ள குழந்தையின் பாலினத்தை தெரிவிப்பது சட்டப்படி குற்றம், குழந்தையின் விவரத்தை தெரியப்படுத்தக் கூடாது. பெண் குழந்தைகள் இறப்பை தடுக்க தமிழக அரசு தொட்டில் குழந்தை திட்டம் கொண்டு வந்து கடுமையாக பின்பற்றி வருகிறது.
இந்நிலையில் அன்னூர் அரசு மருத்துவமனையில் வைக்கப்பட்ட அறிவிப்பு பலகை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான், கோவை