/indian-express-tamil/media/media_files/2025/07/10/whatsapp-image-2025-2025-07-10-15-37-34.jpeg)
Coimbatore
கோவையில் சொந்த வீடு கனவுடன் பல லட்சங்களை முதலீடு செய்த குடும்பங்கள் இன்று கழிவுநீர் அவதியால் தவித்து வருகின்றன. சரவணம்பட்டியில் இருந்து துடியலூர் செல்லும் சாலையில் அமைந்துள்ள ஒரு தனியார் அடுக்குமாடி குடியிருப்புதான் இந்த அவலநிலைக்குக் காரணம். எட்டு ஆண்டுகளுக்கு முன்பு, இந்த குடியிருப்பை விற்பனை செய்த ரியல் எஸ்டேட் நிறுவனம், வாடிக்கையாளர்களுக்குப் பல கவர்ச்சிகரமான வாக்குறுதிகளை அளித்தது. "அனைத்து வசதிகளும் செய்து தரப்படும், கழிவுநீர் வெளியேற சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும்" என்று உறுதிமொழி அளிக்கப்பட்டதை நம்பி, 120க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் இங்கு வீடுகளை வாங்கினர்.
ஆனால், அந்த வாக்குறுதிகள் அனைத்தும் வெறும் வாய்மொழி உறுதிமொழிகளாகவே நின்றுவிட்டன. வீடுகளை வாங்கிய பிறகு, ரியல் எஸ்டேட் நிறுவனம் அளித்த எந்தவொரு அடிப்படை வசதியையும் இதுவரை செய்து கொடுக்கவில்லை என பாதிக்கப்பட்டவர்கள் குற்றம் சாட்டுகின்றனர். குறிப்பாக, கழிவுநீர் வெளியேற்றுவதற்கான சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படாததால், குடியிருப்பு முழுவதும் கழிவுநீர் சூழ்ந்து நிற்கிறது.
இதனால், அப்பகுதி முழுவதும் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது. குடியிருப்பாளர்கள் கடுமையான துர்நாற்றம் மற்றும் சுகாதாரமற்ற சூழலில் வாழ வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பல குடும்பங்கள் இந்த சுகாதார சீர்கேட்டால் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு அவதிப்படுவதாக வேதனை தெரிவிக்கின்றனர். குழந்தைகள் மற்றும் முதியவர்கள் மத்தியில் நோய் பாதிப்பு அதிகரித்து வருவதாகக் கூறப்படுகிறது.
இந்த மோசடி குறித்து மாநகராட்சி அதிகாரிகளுக்கும், மாவட்ட நிர்வாகத்திற்கும் பலமுறை புகார் அளித்தும் இதுவரை எந்த ஒரு நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்பது அதிர்ச்சி அளிக்கிறது. "அதிகாரிகள் கண்டுகொள்ளவில்லை" என்று கூறும் குடியிருப்பாளர்கள், தங்களின் கோரிக்கைகள் காற்றில் கரைந்த கதையாகிவிட்டதாக ஆதங்கப்படுகின்றனர்.
சொந்த வீடு என்ற கனவுடன் பல லட்சங்களை செலவு செய்து அடுக்குமாடி குடியிருப்புகளை வாங்கிய மக்களின் நிலை இன்று கேள்விக்குறியாகி உள்ளது. இதுபோன்ற மோசடியில் ஈடுபடும் நிறுவனங்கள் மீது அரசு கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே அனைவரின் எதிர்பார்ப்பாக உள்ளது.
Stay updated with the latest news headlines and all the latest Lifestyle news. Download Indian Express Tamil App - Android or iOS.