கோவை சுகுணாபுரம் பகுதியை சேர்ந்த கூடைப்பந்து விராங்கனை எலினா லாரெட் அதே பகுதியில உள்ள தனியார பள்ளியில் 10-ம் வகுப்பு படித்து வருகிறார். இதற்கிடையே பள்ளிகளுக்கு இடையிலான கூடைப்பந்து போட்டி மத்தியபிரதேச மாநிலம் குவாலியரில் கடந்த 8 ஆம் தேதி முதல் 15 ஆம் தேதி வரை நடைபெற்றது.
இந்த போட்டிகளில் விளையாடுவதற்காக எலினா லாரெட் சக மாணவிகளுடன் ரெயிலில் மத்திய பிரதேசம் சென்று பின்னர் போட்டியை முடித்துவிட்டு நேற்று முன்தினம் கிராண்ட் டிரங்க எக்ஸபிரஸ் ரயிலில் சென்னை வந்துள்ளார். ரயில் பயணத்தின்போது சாப்பிடுவதற்காக ஆன்லைன் மூலமாக ஆர்டர் செய்து சிக்கன் ரைஸ் வாங்கி வைத்திருந்ததாக கூறப்படுகிறது.
எலினா லாரெட் சக மாணவிகளுடன் சேர்ந்து ரயிலில் வைத்து சிக்கன் ரைஸ் மற்றும் பர்க்கர் சாப்பிட்டதாகவும் இதனால் அவருக்கு கடும் வயிற்று வலியுடன் கூடிய வாந்தி மயக்கம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது. இதுதொடர்பாக எலினா லாரெட் சென்னை அண்ணாநகரில் உள்ள தனது உறவினர் டேவிட் வில்லியம்சிடம் கூறியுள்ளார். அவர், ரெயில் சென்னை வந்ததும் எலினாவை தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அழைத்து சென்றுள்ளார்.
சிகிச்சைக்கு பின்னர் எலினா பெரவள்ளூரில் உள்ள தனது மற்றொரு உறவினர் வீட்டுக்கு சென்றதாகவும் அங்கு சென்ற சிறிது நேரத்திலேயே எலினாவுக்கு மீண்டும் வயிற்று வலி ஏற்பட்டு மயங்கி கீழே விழுந்துள்ளார்.
உடனே அவருடைய உறவினர்கள் அவரை மீட்டு பெரவள்ளூரில் உள்ள பெரியார் அரசு மருத்துவமனையில் சேர்த்துள்ளனர். மருத்துவமனையில் எலினாவை பரிசோதனை மருத்துவர்கள் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளனர்.
இதுகுறித்து பெரவள்ளூர் போலீசாருக்கு தகவல் கொடுக்கப்பட்டு சம்பவ இடத்துக்கு வந்த போலீசார் எலினாவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுதொடர்பாக பெரவள்ளூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். மாணவி சிக்கன் ரைஸ் சாப்பிட்டதால் உயிரிழந்தாரா? அல்லது அவருடைய இறப்புக்கு வேறு ஏதேனும் காரணங்கள் உள்ளதா? என்பது பிரேத பரிசோதனை அறிக்கைக்கு பின்னரே தெரிய வரும் என போலீசார் தெரிவித்தனர்.
இந்நிலையில் கோவை வீராங்கனை ரெயில் உணவை சாப்பிட்டு உயிரிழந்ததாக எழுந்த குற்றச்சாட்டுக்கு ரெயில்வே நிர்வாகம் மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக ரெயில்வே நிர்வாகம் அளித்த விளக்கத்தில், கடந்த 15-ம் தேதி மத்திய பிரதேச மாநிலம் குவாலியரில் இருந்து கிளம்பிய விரைவு ரெயிலில் பயணித்த கோவையை சேர்ந்த பள்ளி மாணவி எலினா சாப்பிட்டதாக கூறப்படும் சிக்கன் ரைஸ் ஐ.ஆர்.சி.டி.சி விநியோகிக்கும் உணவுப்பட்டியலில் கிடையாது.
மாணவிக்கு உடல்நலம் பாதிக்கப்பட்டதாக 139 என்ற மருத்துவ உதவி எண்ணை தொடர்பு கொண்டதாகவும் மாணவியை மருத்துவமனையில் அனுமதிக்க பால்ஹர்ஷா ரயில் நிலையத்தில் மருத்துவர்கள் அறிவுரை வழங்கிய நிலையில் அவர் தொடர்ந்து பயணம் செய்ததாகவும் தெரிவித்துள்ளது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“