கோவையில் கடன் வாங்கிய வணிகரின் வீட்டை வங்கி அதிகாரிகள் ஜப்தி செய்ததைக் கண்டித்து தொழில் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்தனர்.
கோவை கண்ணப்ப நகரை சேர்ந்தவர் கணேஷ் ஆனந்த் (45), இவர் கோவை சின்னவேடம்பட்டி அருகில் மைக்ரோ தொழிற்சாலை வைத்துள்ளார். சிஎன்சி மிசின் வைத்து தொழில் நடத்தி வரும் இவர், கடந்த 2017 ம் ஆண்டு தொழிலை விரிவுபடுத்த அவிநாசி ரோட்டில் உள்ள ஆர்பீஎல் வங்கியில் ரூ. 1 கோடியே 31 லட்சம் வீட்டை அடமானம் வைத்து கடன் வாங்கியுள்ளார்.
தொடர்ந்து 2020 வரை தவணை தவறாமல் மாதம் தோறும் ரூ.1,97,000 கட்டி வந்துள்ளார். கொரோனா காலத்தில் ஏற்பட்ட தொழில் முடக்கத்தினால் தொழில் நலிவடைந்த நிலையில் தவணை கட்ட முடியாமல் இருந்துள்ளார்.
2021 ம் ஆண்டு வங்கியில் பணம் கட்ட கால அவகாசம் வேண்டும் என்று கேட்டுள்ளார். ஆனால் வங்கி அதிகாரிகள் மறுத்துவிட்டனர். மேலும் 2022 ஆண்டு ரூ.10 லட்சம் தவணை தொகையை கட்டி உள்ளார்.
ஆனால் வங்கி அதிகாரிகள் தொடர்ந்து 3 மாதத்திற்கு மேல் தவணை கட்டவில்லை என்றால் வங்கியில் உள்ள விதிகளின் படி, சர்பாசி ஆக்ட் மூலம் கடன் கட்ட வைத்துள்ள அடமான சொத்து பறிமுதல் செய்யப்படும், உடனடியாக ரூ.20 லட்சம் பணம் கட்டினால் மட்டுமே தற்போது அவகாசம் வழங்க முடியும் என்று கூறியுள்ளனர்.
மேலும் தற்போது வட்டியுடன் ரூ.1 கோடியே 70 லட்சம் கட்ட வேண்டும் என்று கறாராக கூறிவிட்டனர்.
இந்நிலையில் வங்கி அதிகாரிகள், போலீசார், வங்கி வக்கீல் என்று சுமார் 7க்கும் மேற்பட்டோர் கணேஷ் ஆனந்த் வீட்டிற்க்கு வந்து வீட்டில் இருந்த அனைவரையும் வெளியேற்றி விட்டு வீட்டை பூட்டி சாவியை எடுத்து சென்றனர்.
இதனால் பாதிக்கப்பட்ட கணேஷ் ஆனந்த் மற்றும் குடும்பத்தினர் என்ன செய்வது என்று தெரியாமல் சாலையில் நின்றனர்.
/indian-express-tamil/media/media_files/7MfCuDCuyggOucD44Wii.jpeg)
இது குறித்து கோவை தொழில் அமைப்புகளின் கூட்டமைப்பினர் மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளித்தனர். இந்த மனு அக்கூட்டமைப்பின் ஒருங்கிணைப்பாளர் ஜேம்ஸ் தலைமையில் வழங்கப்பட்டது.
இது குறித்து பேசிய ஜேம்ஸ், சர்பாசி என்ற மத்திய அரசு கொண்டு வந்த சட்டத்தில் சில மாற்றங்கள் செய்து கடனை தருவதற்கான கால அவகாசத்தை நீட்டிப்பு செய்ய வேண்டும். இந்த சட்டத்தில் மாவட்ட ஆட்சியர் கூட தலையிட முடியும். மாவட்ட ஆட்சியர் இதில் தலையிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கேட்டுக்கொண்டார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“