கோவையில் பீப் கடை நடத்திய அபிதா தம்பதிகளுக்கு பா.ஜ.க-வை சேர்ந்த சுப்பிரமணி என்பவர் மிரட்டல் விடுத்த சம்பவம் பரபரப்பை அதைத்தொடர்ந்து தம்பதியர் இன்று கோவை மாநகர காவல் ஆணையரிடம் மிரட்டல் விடுத்தவரை கைது செய்யக்கோரி புகார் மனு அளித்தனர். இந்தநிலையில், கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க பிரமுகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்து அவர்கள், தாங்கள் உடையாம்பாளையம் பகுதியில், பள்ளி அருகே பிரியாணி கடை வைத்து நடத்தி வருவதாகவும், கடந்த கிறிஸ்மஸ் பண்டிகை அன்றுதான் கடை ஆரம்பித்ததாகவும், பா.ஜ.க-வைச் சேர்ந்த பாலசுப்பிரமணியம் என்பவர், 'இங்கு யாரைக் கேட்டு கடை ஆரம்பித்தீர்கள், எங்க பீப் கடை எல்லாம் போடக்கூடாது' என்று கூறி மிரட்டினார்.
/indian-express-tamil/media/post_attachments/20850e22-561.jpg)
அதற்கு நாங்கள், 'எல்லோரிடமும் அனுமதி பெற்று கடை வைத்திருக்கிறோம்' என்று கூறியும் அவர் எங்களை பீப் விற்கக் கூடாது என்று கூறி மிரட்டி விட்டு சென்றார். கடந்த ஐந்தாம் தேதி மாலை தனியாக வந்த அவர் மீண்டும் எங்களை கடையை விரைவாக அகற்றக் கூறியும், இல்லை என்றால் கடையை உடைத்து விடுவேன் என்றும் கடுமையாக மிரட்டினார்.
அங்கிருந்து தொலைபேசி மூலம் ஆட்களையும் வரவைத்து மிரட்டினார். நாங்கள் யாரையும் கட்டாயப்படுத்தி உணவு விற்கவில்லை. விருப்பப்பட்டவர்கள் வந்து சாப்பிடுகிறார்கள். அதை தடுக்காதீர்கள் என்று கூறினோம். அன்று எங்களுக்கு மிகுந்த மன உளைச்சலும் பண நஷ்டமும் ஏற்பட்டது. நாங்கள் சட்டப்படி காவல் நிலையத்திலும் அனுமதி பெற்றே கடை வைத்திருக்கும். ஜாதி பிரச்சனை ஏற்படும் என்று கூறி எங்களை மிரட்டுகின்றனர் எனக் கூறினார்.
நாங்கள் எங்கு கடை போட்டு இருந்தோமோ அங்கேயே கடையை மீண்டும் தொடர வேண்டும் என்றும், எங்களுக்கு தெரிந்த தொழில் இது மட்டுமே எனக் கூறியும் என்னுடைய பீப் கடை தற்போது அகற்றப்பட்டு இருப்பதால் கமிஷனர் மீண்டும் அனுமதி வழங்க வேண்டும் என்றும் குடும்பம் மற்றும் தங்களுக்கு உயிர் பாதுகாப்பு வேண்டும் என்றும் பண பலம் இருக்கும் அவர்கள் எங்களை மிரட்டுவதால் அவர்களை கைது செய்ய வேண்டும் என்றும் புகார் மனு கொடுத்துள்ளனர்.
இந்தநிலையில், கொலை மிரட்டல் விடுத்த பா.ஜ.க பிரமுகர் மீது நான்கு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவை, மணியக்காரபாளையம் அருகே உள்ள உடையாம்பாளையம் பகுதியைச் சேர்ந்த பா.ஜ.க ஒ.பி.சி அணி மாநகர மாவட்ட செயலாளர் சுப்பிரமணி மீது துடியலூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்து உள்ளனர். சுப்ரமணி மீது 126(2), 192, 196 , 351/2 உள்ளிட்ட நான்கு பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.
செய்தி: பி.ரஹ்மான் - கோவை மாவட்டம்.