லஞ்ச வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள கோவை பாரதியார் பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதிக்கு நிபந்தனை ஜாமீன் வழங்கி சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கோவை பாரதியார் பல்கலைக் கழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்திற்கு, 30 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக, பல்கலைக் கழக துணைவேந்தர் கணபதி, பேராசிரியர் தர்மராஜ் ஆகியோர், கடந்த 3 ஆம் தேதி (பிப்ரவரி) கோவை லஞ்ச ஒழிப்புத் துறையினரால் கைது செய்யப்பட்டார். இவரது ஜாமீன் மனுக்களை, கோவை சிறப்பு நீதிமன்றம் கடந்த 22 ஆம் தேதி தள்ளுபடி செய்தது.
இதையடுத்து தனக்கு ஜாமீன் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் கணபதி மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில் தனக்கு எதிரான புகார் ஜோடிக்கப்பட்டது. ஏற்கனவே ஐந்து நாட்கள் போலீஸ் காவலில் வைத்து விசாரிக்கப்பட்ட போது, தனக்கு எதிராக எந்த ஆதாரங்களும் கிடைக்காததால் சாட்சிகளை மிரட்டுவதற்கான வாய்ப்பு ஏதும் இல்லை. ஏற்கனவே தான் சொல்ல முடியாத துயரத்திற்கும், நற்பெயருக்கு களங்கமும் ஏற்பட்டுள்ளதாகவும், நீரழிவு நோயால் பாதிக்கப்பட்டுள்ளதால் உடல் ஆரோக்கியம் மோசமாகி விட்டதாகவும் ஜாமீன் வழங்கினால் நீதிமன்றத்தின் பிடியில் இருந்து தப்பப் போவதில்லை. காவல் துறையினரின் விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்கவும் தயாராக இருப்பதாகவும், எனவே தனக்கு ஜாமீன் வழங்க வேண்டும் என கணபதி தன்னுடைய மனுவில் தெரிவித்துள்ளார்.
இந்த வழக்கு உயர்நீதிமன்ற நீதிபதி ஜெகதீஷ் சந்திரா முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தது. விசாரணைக்கு பிறகு உத்தரவிட்ட நீதிபதி, நிபந்தனை அடிப்படையில் ஜாமீன் வழங்குவதாகவும் காலை மற்றும் மாலை இரண்டு வேளைகளில் விசாரணை அதிகாரி முன்பு நேரில் ஆஜராகி கையெழுத்து போட வேண்டும். சம்மந்தப்பட்ட விசாரணை நீதிமன்றத்தில் பாஸ்போர்ட்டை ஒப்படைக்க வேண்டும். கோவையை விட்டு வெளியேறக் கூடாது. அவ்வாறு வெளியேற வேண்டும் என்றால் முறையாக சம்மந்தப்பட்ட அதிகாரியிடம் அனுமதி பெற வேண்டும். காவல் துறை விசாரணைக்கு முழு ஒத்துழைப்பு அளிக்க வேண்டும். சாட்சிகளை கலைக்க கூடாது என்ற நிபந்தனைகளுடன் ஜாமீன் வழங்கி நீதிபதி உத்தரவிட்டார்.