நுகர்வோரின் பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில், தரமான பொருட்களைத் தேர்வு செய்ய பொறியாளர்கள் முன்வர வேண்டும் என்று இந்திய தர நிர்ணய அமைவனத்தின் (BIS - Bureau of Indian Standards) கோவை கிளை அலுவலக இயக்குநர் மற்றும் தலைவர் பவானி வலியுறுத்தி உள்ளார்.
இந்திய தர நிர்ணய அமைவனம், கோவை கிளை சார்பாக, பொறியியல் துறைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தர நிலைகள் மற்றும் அதற்கான ஐ.எஸ்.ஐ (ISI), பி.ஐ.எஸ். (BIS), ஹால்மார்க் (Hallmark) தரச்சான்றிதழ்கள் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் கருத்தரங்கு மற்றும் பயிற்சிப் பட்டறைகள் நடத்தப்பட்டன.
BIS - நுகர்வோர் பாதுகாப்பின் ஆதாரம்:
உணவு மற்றும் பொது விநியோக அமைச்சகத்தின்கீழ் செயல்படும் இந்திய தரநிர்ணய அமைவனம், நுகர்வோரின்பாதுகாப்பை அடிப்படையாக கொண்டு செயல்பட்டு வருகிறது. தர நிர்ணயத்தின் முக்கியத்துவத்தையும், அதை அனைத்துத் துறைகளிலும் சட்டப்பூர்வ விதிமுறைகளுக்கு உட்பட்டு செயல்படுத்தும் முறைகள் குறித்தும் இந்திய தர நிர்ணய அதிகாரிகள் தொடர்ந்து விழிப்புணர்வுகளை ஏற்படுத்தி வருகின்றனர்.
இந்த விழிப்புணர்வு நடவடிக்கையின் ஒருபகுதியாக, கோவை மண்டலத்தில் உள்ள அரசு மற்றும் தனியார் துறைகளில் பணிபுரியும் பொறியாளர்களுக்காக இந்திய தர நிர்ணய அமைவனம், கோவை கிளை சார்பாக ஒரு சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.
கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள நீர்வளத்துறை அலுவலகத்தில் நடைபெற்ற இந்நிகழ்வுக்கு, இந்திய தர அமைவனத்தின் கோவை கிளை அலுவலக இயக்குநர் மற்றும் தலைவர் பவானி தலைமை தாங்கினார். இதில், பொறியியல் துறைகளில் பயன்படுத்தப்படும் பொருட்களின் தர நிலைகள், ஐ.எஸ்.ஐ., பி.ஐ.எஸ்., ஹால்மார்க் தரச்சான்றிதழ்கள் பற்றியும், 'BIS Care App' செயலி மூலம் தரத்தை எவ்வாறு சரிபார்ப்பது என்பது பற்றியும் விரிவான விளக்கங்கள் அளிக்கப்பட்டன.
நிகழ்ச்சியின் நோக்கம் குறித்துப் பேசிய பவானி, "பி.ஐ.எஸ். சார்பாக பல்வேறு துறை சார்ந்தவர்களுக்கு தர நிர்ணயங்கள் குறித்த விளக்கங்கள், தரச்சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறை மற்றும் தர நிர்ணயங்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவம் குறித்து தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம். அரசு, தனியார் துறைகளில் பணியாற்றும் பொறியாளர்கள் இந்தத் தர நிர்ணயங்களை அறிந்து, தங்கள் பணிகளில் தரமான பொருட்களைப் பயன்படுத்துவதை உறுதி செய்ய வேண்டும் என்பதை வலியுறுத்தும் விதமாகவே இந்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடத்தப்பட்டது" என்று தெரிவித்தார்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை