கோவையில்பாஜக அலுவலகத்தின் மீது பெட்ரோல் குண்டு வீசப்பட்ட வழக்கு தொடர்பான ஒருவர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மற்றொருவர் தலைமறைவாக உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
கோவை சித்தாபுதூர் பகுதியில் உள்ள பாஜக மாவட்ட அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசப்பட்ட சம்பவம் தமிழகம் முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்திய நிலையில், அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் பல பகுதிகளில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் பிரமுகர்கள் வீடுகளில் பெட்ரோல் குண்டு வீசும் சம்பவம் அரங்கேறியது.
இதனை தடுக்கவும் குற்றவாளிகளை பிடிக்கவும் காவல்துறையினர் தீவிரம் காட்டி வரும் நிலையில். தற்போது கோவை பாஜக அலுவலகத்தில் பெட்ரோல் குண்டு வீசியதாக தொடர்பாக, பி.எஃப்.ஐ நிர்வாகி சதாம் உசேன் என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் மற்றொருவர் தலைமறைவாக உள்ளதாக கோவை மாநகர காவல் ஆணையாளர் பாலகிருஷ்ணன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக செய்தியாளர்கள் சந்திப்பில் பேசிய அவர் கூறுகையில்,
கோவை மாநகரில் வி.கே.கே. மேனன் சாலையில் உள்ள பாஜக அலுவலகத்தில் கடந்த 22"ம் தேதியன்று இரவு எரிபொருள் பாட்டில் எரிந்த சம்பவத்தில் 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டிருந்தது. 3 தனிப்படைகள் அமைத்து புலன் விசாரணை நடத்தப்பட்டு வந்தது.
100"க்கும் மேற்பட்ட சிசிடிவி கண்காணிப்பு கேமராக்கள் ஆய்வு, தொழில்நுட்ப அடிப்படையிலான விசாரணை, சாட்சி விசாரணை அடிப்படையில் துடியலூர் பகுதியை சேர்ந்த பாப்புலர் ப்ராண்ட் ஆப் இந்தியா அமைப்பின் பொறுப்பாளர் சதாம் உசைன் (31) என்பவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
மேலும் இவ்வழக்கில் தொடர்புடைய தலைமறைவாக உள்ள மற்றொரு நபரை தேடி வருகிறோம். இதனிடையே சதாம் உசைன் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தப்படுவார். இருவரும் எப்படி திட்டம் தீட்டினார்கள் என்ற கோணத்திலும், இந்த சம்பவத்தில் வேறு யாராவது சம்மந்தப்பட்டு இருக்கிறார்களா என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஏற்கனவே 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டு இருந்த நிலையில், தற்போது 4 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. சதாம் உசைன் மீது மேலும் சில வழக்குகள் உள்ளது. அது குறித்தும் விசாரணை நடத்தி வருகிறோம். காந்திபுரம் பகுதியில் நடந்த வழக்கில் இவர்களுக்கு தொடர்பு இருக்கிறதா என விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
தற்போது வரை 3 வழக்குகளில் குற்றவாளிகள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்கள் தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்படுவார்களா என்பதை தற்போது சொல்ல முடியாது எனத் தெரிவித்தார்.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“