இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கையின் வெற்றியை கொண்டாடும் விதமாக, கோவையில் பா.ஜ.க சார்பில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது. இதில் பா.ஜ.க தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் எம்.எல்.ஏ, அ.தி.மு.க சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் கே.ஆர். ஜெயராமன், பா.ஜ.க மாவட்ட தலைவர் ரமேஷ் மற்றும் நிர்வாகிகள், எனப் பலரும் கலந்து கொண்டனர்.
பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக இந்திய ராணுவம் மேற்கொண்ட 'ஆபரேஷன் சிந்தூர்' நடவடிக்கை வெற்றிகரமாக அமைந்தது. இந்த வெற்றியைக் கொண்டாடும் விதமாகவும், பிரதமர் மோடி மற்றும் ராணுவ வீரர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாகவும் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பா.ஜ.க-வினர் பேரணி நடத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, கோவையில் மூவர்ணக் கொடி பேரணி நடைபெற்றது.
கணபதி பேருந்து நிலையத்தில் இருந்து தொடங்கிய இந்த பேரணி, சங்கனூர் சாலை வழியாக கண்ணப்பன் நகர் வரை ஊர்வலமாகச் சென்றது. பேரணியின் முன்பு, பிரமோஸ் ஏவுகணை மாதிரி நான்கு சக்கர வாகனத்தில் கொண்டு வரப்பட்டது.
இந்த பேரணியில் பாரத மாதா, நேதாஜி, அப்துல் கலாம், விவேகானந்தர், பாரதியார் வேடமணிந்த தொண்டர்கள் கலந்து கொண்டனர்.