கோவை மாவட்டத்தில், கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு முதலமைச்சர் ஸ்டாலின் திறந்து வைத்த மேம்பாலம் பழுதடைந்துள்ளது.
உக்கடத்தில் இருந்து பொள்ளாச்சி, பேரூர், செல்வபுரம் ஆகிய பகுதிகளுக்கு விரைந்து செல்லும் வகையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில், ரூ. 470 கோடி மதிப்பீட்டில் ஆத்துப்பாலம் முதல் உக்கடம் சந்திப்பு வரை 3.8 கி.மீ தூரத்திற்கு பாலம் கட்டப்பட்டது. இந்த மேம்பாலத்தை முதலமைச்சர் ஸ்டாலின் கடந்த ஆகஸ்ட் மாதம் திறந்து வைத்தார்.
இந்நிலையில், இந்த புதிய பாலத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. ஆத்துப்பாலத்தில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே விரிசல் ஏற்பட்டதுடன், சில துகள்கள் உடைந்து கீழே விழும் வகையில் உள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். புதிதாக கட்டப்பட்ட பாலமே பழுதடைந்துள்ளதால் அப்பகுதி மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர்.
எனவே, பெரும் அசம்பாவிதம் ஏற்படுவதற்கு முன்பாக பாலத்தை சீரமைத்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
செய்தி - பி.ரஹ்மான்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“