மத்திய அரசின் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தை கண்டித்து தமிழக கேபிள் டிவி ஆப்ரேட்டர்கள் பொதுநலச் சங்கம் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
மத்திய அரசின் கீழ் இயங்கும் தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையம் (TRAI) NTO – 3 (தேசிய கட்டண கொள்கை: 3) அமல்படுத்தியதன் காரணமாக கட்டண சேனல்களில் கட்டண விலை உயர்ந்துள்ளது.
இந்நிலையில் TRAI யை கண்டித்தும், அக்கட்டணத்தை கட்டுப்படுத்த வலியுறுத்தியும் இன்று தமிழகம் முழுவதும் தமிழக கேபிள் டிவி ஆபிரேட்டர்கள் பொதுநல சங்கம் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது.
அதன் ஒரு பகுதியாக கோவையில் தெற்கு வட்டாட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

கோவை மாவட்ட பொறுப்பாளர் சிவக்குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் இச்சங்கத்தை சேர்ந்த சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் கலந்துகொண்டு கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டியும், TRAI அமைப்பை கண்டித்தும் கண்டன முழக்கங்களை எழுப்பினர்.
TRAI பொது மக்களின் நலனை கருத்தில் கொள்ளாமல், கார்ப்பரேட் முதலாளிகளுக்கு ஆதரவாக NTO: 3 யை அமல்படுத்தி கட்டண சேனல்களின் விலையை உயர்த்தி பொது மக்களுக்கு சிரமத்தை அளித்துள்ளதாகவும், கட்டண உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.
செய்தி: பி.ரஹ்மான், கோவை மாவட்டம்
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“