க. சண்முகவடிவேல்
Trichy: கடந்த 2022 ஆம் ஆண்டு கோவை உக்கடம் பிரதான சாலையில் உள்ள பிள்ளையார் கோவில் எதிரே கார் குண்டுவெடிப்பு நிகழ்ந்தது. இந்த குண்டு வெடிப்பு தொடர்பாக, சென்னை, கோவை, மதுரை, கடலூர், திருச்சி, ராமநாதபுரம், நெல்லை உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில், 20-க்கும் மேற்பட்ட இடங்களில் என் ஐ ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களின் வீடுகளில் சோதனை நடத்தி வருவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அந்த வகையில், திருச்சி கூனி பஜார் பகுதியைச் சேர்ந்த அஷ்ரப் அலி என்பவர் வீட்டிலும் இன்று அதிகாலை முதல் என்.ஐ. ஏ அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். அஷ்ரப் அலி திருச்சியின் முக்கிய வணிக நிறுவனங்கள் செயல்படும் பகுதியான சிங்காரத் தோப்பில் எலக்ட்ரிக்கல் கடை வைத்திருக்கின்றார். இவர் கோவை குண்டுவெடிப்பு தொடர்பான வழக்கில் சிக்கியவர்களுக்கு ஏதாவது ஒரு வகையில் உதவியாக இருந்திருக்கிறார் என்ற கோணத்தில் சோதனை தீவிரமாக நடந்து வருகிறது.
சட்டத்திற்கு எதிராக செயல்படுபவர்களுக்கு நிதி வசூல் செய்வது, உபகரணங்கள் உதவியது, மூளைச் சலவை செய்தது என்பன உள்ளிட்ட பல்வேறு குற்றச்சாட்டுகளின் அடிப்படையில் இந்த சோதனை தீவிர படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“