கோவை கார் சிலிண்டர் வெடித்த வழக்கு: ஜமேசா முபின் உறவினர் வீட்டில் போலீஸ் சோதனை
கோவையில் கார் சிலிண்டர் வெடித்ததில் இறந்த ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டும், அவரது வீட்டில் சோதனை செய்தும் வருகின்றனர்.
Coimbatore News in Tamil: கோவை உக்கடம் அருகே கோட்டை ஈஸ்வரன் கோவில் முன்பாக கடந்த 23 ஆம் தேதியன்று அதிகாலை மாருதி கார் ஒன்று வெடித்து விபத்து ஏற்பட்டது. இதில் காரில் இருந்த நபர் உடல் கருகி உயிரிழந்தார். காவல் துறையினர் நடத்திய முதல் கட்ட விசாரணையில் காரில் இருந்த சிலிண்டர் வெடித்ததில் கார் இரண்டாக உடைந்தது சிதறியதும், அப்பகுதியில் ஏராளமான ஆணிகளும், கோலி குண்டுகளும் இருந்தது கண்டறியப்பட்டது.
Advertisment
பின்னர் காரில் சிலிண்டர் வெடித்து உயிரிழந்தவர் உக்கடம் ஜி.எம். நகர் கோட்டை புதூர் பகுதியை சேர்ந்த ஜமேசா முபின் என்பதும், 2019 ஆம் ஆண்டில் இவரிடம் தேசிய பாதுகாப்பு முகமை அமைப்பினர் விசாரணை நடத்தியதும் தெரியவந்தது. இதையடுத்து ஜமேசா முபின் வீட்டை சோதனையிட்ட காவல் துறையினர் பொட்டாசியம் நைட்ரேட், அலுமினியம், சல்பர் போன்ற பொருட்கள் என மொத்தம் 75 கிலோ வெடி மருந்துகளை கைப்பற்றினர்.
இவ்வழக்கில் தொடர்புடைய உக்கடம் பகுதியை சேர்ந்த முகமது தல்கா முகமது அசாருதீன், முகமது ரியாஸ், பெரோஸ் இஸ்மாயில், முகமது நவாஸ் இஸ்மாயில் ஆகிய 5 பேரை உக்கடம் காவல் துறையினர் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் 5 பேர் மீதும் உபா சட்டத்தில் கீழ் வழக்குப்பதிவு செய்து நீதிமன்ற காவலில் சிறையில் அடைத்தனர்.
இந்நிலையில் இந்த வழக்கு தேசிய புலனாய்வு முகமை விசாரணைக்கு ஒப்படைக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. தேசிய புலனாய்வு முகமை டி.ஐ.ஜி வந்தனா மற்றும் எஸ்.பி. ஸ்ரீஜித் ஆகியோர் கோவையில் முகாமிட்டுள்ளனர். பந்தயசாலை பகுதியில் உள்ள முகாம் அலுவலகத்தில் காவல் துறை அதிகாரிகளிடம் இந்த வழக்கு தொடர்பான விபரங்களை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் கேட்டறிந்தனர்.
இதனிடையே கோவை உக்கடம் பகுதியில் உள்ள வின்செண்ட் சாலை அடுக்குமாடி குடியிருப்பில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். ஜமேசா முபினின் உறவினரான அப்சர்கான் (28) என்பரிடம் காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வரும் நிலையில், அப்பகுதியில் உள்ள அவரது வீட்டில் காவல் துறையினர் சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வீட்டில் இருந்த ஒரு மடிக்கணினியை கைப்பற்றி காவல் துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர்.